திருப்பூர் நிகழ்வில் தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்ததால் சலசலப்பு


திருப்பூர்: திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவா கேந்திராவை இன்று (ஜன. 24) அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் துவங்கி வைத்த நிகழ்வில், தேசிய கீதத்துக்கு பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்ததால் லேசான சலசலப்பு எழுந்தது.

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் ரயில் நிலையம் எதிரில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு பாஸ்போர்ட் சேவை மையம் புதியதாக திறக்கப்பட்டது. திருப்பூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியது. நிகழ்வில் முதன்மை பாஸ்போர்ட் அலுவலர் கே.ஜே.சீனிவாசா, மேற்கு மண்டல தபால்துறை தலைவர் ஏ.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருப்பூர் எம்.பி.கே.சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவங்கி வைத்ததும், சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் அமரும் முன், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தமிழ்த்தாய் வாழ்த்து என மேடையில் இருந்தவர்களிடம் தெரிவிக்கவே, லேசான சலசலப்பு எழுந்த நிலையில் தமிழ்த்தாய் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, “திருப்பூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதனால் பொதுமக்கள் அலைச்சல் குறையும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த புதிய மையத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் புதிய பாஸ்போர்ட், புதுப்பிக்கவும் இந்த அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். நாள்தோறும் 40 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

x