டங்ஸ்டன் விவகாரத்தில் மக்களை ஏமாற்றியது திமுக: மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு


புதுச்சேரி: டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலை திமுக செய்தது என மத்திய அமைச்சர் முருகன் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதுரை மேலுார் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கனிம வளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தனர். அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் தொல்லியல் பகுதி, விவசாய பாதிப்பு, பிற பாதிப்புகளை விளக்கி கூறினர்.

இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார். சுரங்க விவகாரத்தில் திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது. 2017ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகளாக சர்வே உள்ளிட்டவை நடந்து வந்தது. அது 2021ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டது.

இதுபற்றி மத்திய அரசு கேட்கும் போதும் தமிழக அரசு ஏதும் சொல்லவில்லை. ஏலத்துக்கும் வரும் போது, மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகு தான் தாங்களும் எதிர்ப்பதாக திமுக பொய்யான பிம்பத்தை காட்டி தவறான தகவலை மக்கள் மத்தியில் திமுக பரப்பியது. கடந்த 2021 முதல் 2024வரை மத்திய அரசு கேட்டபோது வேண்டாம் என திமுக ஒருமுறைக் கூட சொல்லவில்லை" என்று எல்.முருகன் தெரிவித்தார்.

x