பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பை உறுதி செய்க: தமிழக அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்


சென்னை: பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. வீராங்கனைகள், பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக் கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப் பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியா கியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

பிகாரின் தர்பங்கா பல்கலைக் கழக அணியுடன் இன்று நடைபெற்ற போட்டியின் போது, பிகார் வீராங்கனைகளின் விதிமீறல்கள் குறித்து புகார் செய்ததால், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது. பஞ்சாப் மாநில அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு தமிழக வீராங்கனைகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல், தமிழக பயிற்சியாளர் மீதான வழக்கை திரும்பப் பெறச் செய்வதுடன், பிகார் அணியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

x