புதுச்சேரி: உலகம் முழுக்க திருக்குறள் கலாச்சார மையம் அமையும்- டெல்லியில் விரைவில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இந்திய பள்ளி உளவியல் சங்கம், வடோதராவில் உள்ள ஹிப்னாசிஸ் அகாடமியுடன் இணைந்து புதுவை பல்கலைக் கழகத்தில் 2 நாள் சர்வதேச மாநாடை நடத்துகிறது. மாநாட்டின் தொடக்கவிழா இன்று நடந்தது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்நிகழ்வை தொடங்கி வைத்து பேசியதாவது: "விஞ்ஞான உணர்வு, மனித நேயம், விசாரணை மற்றும் சீர்த்திருத்த உணர்வை வளர்ப்பது இந்திய குடிமகனின் கடமையாகும். இதை கடைபிடித்து நம் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள் கட்டமைப்பை வலுப்படுத்த பிரதமர் தொடர் முயற்சி செய்கிறார். கடந்த நவம்பரில் ஒரு நாடு ஒரு சந்தா முயற்சியை அறிமுகப்படுத்தி மருத்துவம், மேலாண்மை, சமூக அறிவியல், மனித நேய துறைகளில் அறிவார்ந்த மின்பத்திரிக்கைகள் அணுகலை நோக்கமாக செயல்படுத்தினார்.
சுமார் 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் 30 வெளியீட்டாளர்களிடம் இருந்து 13 ஆயிரம் இதழ்களை அணுகி பயனடைய முடியும். மனித ஆயுள் காலம் முழுவதும் ஹிப்னாஸிஸை புரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் முக்கிய விஷயங்களை எளிதாக்க இது போன்ற மாநாடுகள் தளத்தை உருவாக்குகின்றனர். ஆசிரியர்கள் திருக்குறளால் ஈர்க்கப்பட்டு, மாணவர்களை ஊக்குவியுங்கள். இது அற்புதமான கற்றல் வாய்ப்பாக அமையும். ஒரு ஆசிரியர் வகுப்பறையின் அரசராவார்.
தைரியம், தாராள மனப்பான்மை, ஞானம், ஆற்றல் ஆகிய நான்கு குணங்களும் அரசரை அலங்கரிக்கின்றன. இக்குணங்களை கல்வியாளர் களும், பேராசிரியர்களும் வகுப்பறைக்கும், ஆய்வகத்துக்கும் எடுத்து செல்வது அவசியம். ஒருவர் எதை கற்றாலும் முழுமையாக கற்பது அவசியம். அவரது நடத்தையானது அவனது கற்றலுக்கு தகுதியானதாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு, இணையதளம், விஎல்எஸ்ஐ தொழில் நுட்பம், சாட் ஜிபிடி என எதுவாக இருந்தாலும் திருக்குறளுக்கு அப்பாற்பட்டது அல்ல. திருக்குறள் பொருள் நிரந்தரமானது. இது தமிழின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்று பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார்.
தேர்தல் முன்பாக அளித்த வாக்குறுதியில், உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சி அமைந்து 4 மாதங்களில் கிட்டத்தட்ட 6 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம். அனைத்து நாடுகளிலும் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்குவதே நோக்கம். டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும்" என்று எல்.முருகன் கூறினார்.
முன்னதாக பல்கலைக் கழக பதிவாளர் ரஜனிஷ்பூடானி வரவேற்றார். துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை வகித்தார். பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம் எழுதிய உளவியல் சொற்களஞ்சியம் நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பேரவைத் தலைவர் செல்வம், கல்வியமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.