சென்னை: பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. வீராங்கனைகளையும், பயிற்சியாளரையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்க சென்றிருந்த அன்னை தெரசா பல்கலைக் கழக மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப் பதோடு, தமிழக பயிற்சியாளரையும் அம்மாநில காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.
உரிய விதிமுறைகளை பின்பற்றி கபடி போட்டியை நடத்த வேண்டிய நடுவர்களே விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பதோடு, அதனை சுட்டிக்காட்டிய தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, பஞ்சாப் மாநில அரசை தொடர்பு கொண்டு தமிழக கபடி வீராங்கனைகளை தாக்கிய நடுவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக கபடி பெண்கள் அணியின் பயிற்சியாளரையும், வீராங்கனைகளையும் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தினகரன் தெரிவித்துள்ளார்.