புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் வாய்மூடி மவுனம் காப்பது ஏற்புடையதல்ல என்று அதிமுக விமர்சித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: "புதுச்சேரி மாநிலத்தல் கடந்த 10ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய கொள்கை முடிவுகள் மற்றும் புதிய செயல் திட்டங்கள் குறித்து இதுவரை அரசு சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபோன்ற செயல் ஏற்புடையதல்ல.
நம் மாநிலத்தை பொறுத்தவரை புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் பிரச்சினை பூதாகாரமாக தினசரி உருவாக்கப்பட்டு வருகிறது. புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றால் அது எப்போது எடுக்கப்பட்டது? அரசின் இந்த கொள்கை முடிவுக்கு துணைநிலை ஆளுநர் முன்பே அனுமதி அளித்துள்ளாரா? இதனை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டியது அரசின் கடமையாகும். யூனியன் பிரதேசமான புதுச்சேரியை பொறுத்தவரை கள்ளுக் கடை, சாராயக் கடை மற்றும் மதுக் கடை கொண்டுவர வேண்டும் எனில் துணை நிலை ஆளுநர் அனுமதியில்லாமல் கொண்டுவர முடியாது.
அப்படி இருக்கும் போது புதிய மதுபான தொழிற்சாலை அமைக்க துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்துள்ளாரா? இல்லையா? என்பதை ஏன் பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. இதுவரை துணை நிலை ஆளுநர் புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்றால் இதற்கு மேல் அனுமதி வழங்குவாரா? என மக்களின் நியாயமான கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்க வேண்டியது துணை நிலை ஆளுநரின் கடமை. தற்போது காங்கிரஸ் கட்சியானது துணை நிலை ஆளுநரை சந்தித்து இப்பிரச்சனையில் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர்.
ஊழலைப் பற்றி பேசும் தகுதி கடந்த கால திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கு இல்லை. புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கும் பிரச்சினையில் இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான திமுகவுக்கு மதுபான தொழிற்சாலை உரிமம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்வர் நாராயண சாமி வெகுண்டு எழுந்து கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தமட்டில் திமுக என்பது ஆளும் கட்சியின் ஓர் அங்கம் என்பதை நாராயணசாமி மறந்து விட்டார்.
புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் வாய்மூடி மவுனம் காப்பது ஏற்புடையதல்ல. கடந்த சில நாட்களாகவே துணை நிலை ஆளுநர் மாளிகை பஞ்சாயத்து செய்யும் மாளிகையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுமா? இல்லையா? என்பதை ஏன் தெரியப் படுத்தாமல் மவுனம் சாதிக்கிறார். இவ்விஷயத்தில் தேசிய கட்சியான பாஜகவின் முடிவு என்ன என்பதை அக்கட்சியின் மூலம் துணை நிலை ஆளுநராக உள்ள நமது துணை நிலை ஆளுநர் தெரியப்படுத்த வேண்டியது அவருடைய கடமையாகும்” என்று அன்பழகன் கூறினார்.