திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்: சீமானை மறைமுகமாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!


சென்னை: அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை என மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நாம் தமிழர் கட்சியினர் உட்பட மாற்றுக் கட்சியினர் 3,000 பேர் திமுகவில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்களை கண்டு திமுகவினர் கவலைப்பட தேவையில்லை. திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல; திமுகவை பேரறிஞர் அண்ணா உருவாக்கிய போது, இக்கழகம் ஆட்சிக்கானது மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும், மக்களுக்கு பணியாற்ற வேண்டும், ஏழை - எளிய - பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும், பாடுபட வேண்டும் என்றார்.

கட்சித் தொடங்கியதுமே தேர்தலில் நின்று ஆட்சிக்கு வர வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள். நாங்கள் தான் அடுத்த ஆட்சி, நாங்கள் தான் அடுத்த முதலவர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை. இங்கே மாற்றுக்கட்சி என்றுதான் போட்டுள்ளோம். ஏனென்றார் அந்தக் கட்சியின் பெயரைக் கூட நான் உச்சரிக்க விரும்பவில்லை.

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது. திமுக நேற்று முளைத்த காளான் அல்ல. நீங்கள் (சீமான்) தரக்குறைவாக பேசப் பேசத்தான் உங்களை விட்டு விலகுகிறார்கள். அவரால் திமுக வளர்கிறது. ஆனாலும் மீண்டும், மீண்டும் சொல்வோம். முதலில் நீங்கள் யாரை நம்பி சென்றீர்களோ அவர்களும் தொடர்ந்து பேச வேண்டும். திமுகவை விமர்சிப்பவர்கள், திராவிட மாடல் ஆட்சியை விமர்சிப்பவர்கள் தொடர்ந்து அதை செய்ய வேண்டும், அப்போது தான் நமது வெற்றி இன்னும் பிரகாசமாக இருக்கும் என்று கூறினார்.

அது போல் ஆளுநர் ஆர்என் ரவி பேச்சு திமுகவை வளர்க்கிறது. என்றைக்காவது ஆளுநரை மாற்ற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறாமோ ?. அவரை மாற்ற வேண்டாம். அடுத்த முறையும் அவர் ஆளுநர் உரையை படிக்காமல் வெளியேற வேண்டும். அதை நாம் பார்க்க வேண்டும். எனவே இப்போது நான் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கோரிக்கை வைக்கிறேன், ஆளுநரை மாற்ற வேண்டாம்” என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

x