கோவை: நீங்கள் பெரியாரை திராவிட குறியீடாக பார்க்கிறீர்கள். நாங்கள் பிரபாகரனை தமிழ் தேசியத்தின் பெரும் குறியீடாக பார்க்கிறோம். நாங்கள் திராவிடம் ஒழிக என்று பேசவில்லை. தமிழ் வாழ்க என்றுதான் கூறுகிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, "ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம். அவர்கள் 32 கட்சிகளுடன் போட்டியிடுகிறார்கள். ஆனால் அவர்களால் 150 பேரை கூட திரட்ட முடியவில்லை. கிழக்கில் சூரியன் உதித்தால்தான் உலகத்திற்கு வெளிச்சம். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால் தான் மக்களுக்கு வெளிச்சம். பெரியார் குறித்து இப்போது எதிராக பேசுவது ஏன் என கேட்கிறீர்கள்.?
தலை வலி வரும் போது தான் மாத்திரை போட முடியும். பெரியாரை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் தான் இப்போது பேசுகிறார்கள். பெரியாரை அவர்கள் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்கள். பெரியார் பற்றி பேசுகிறவர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அவரைப் பற்றி பேசி வாக்கு சேகரிக்க வேண்டியது தானே ? நீங்கள் பெரியாரை திராவிட குறியீடாக பார்க்கிறீர்கள். நாங்கள் தமிழ் தேசியத்தின் பெரும் குறியீடாக பிரபாகரனை பார்க்கிறோம்.
திராவிடம் என்று கூறுபவர்கள் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் தான் இரும்பை கண்டுபிடித்தார்கள் என்று கூறுகிறார்கள். இப்போது திராவிடர்கள் எங்கே போனார்கள்?. தமிழை காக்க வளர்க்க நமது முன்னோர்கள் பலர் போராடி உள்ளனர். ஆனால் அவர்களை முன் நிறுத்து வதை விட்டுவிட்டு, ஒருவரை மட்டும் ஏன் கூறுகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு லட்சம் போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர்கள் அண்ணா பல்கலைக் கழக மாணவி பிரச்சினையில் பாமக போன்ற கட்சிகளுக்கு அனுமதி மறுத்தது ஏன்?.
எனது வீட்டின் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். எனது படத்தை ஜட்டி போட்டு அவமதிப்பு போராட்டம் நடத்துபவர்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். சபாநாயகர் தம்பி ஞானசேகரன் என்று கூறுகிறார். நீங்கள் எதைப் பற்றியும் பேச அருகதை இல்லாதவர்கள். நாங்கள் திராவிடம் ஒழிக என்று பேசவில்லை. தமிழ் வாழ்க என்றுதான் கூறுகிறோம்.
இன்று எனது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துபவர்கள் என்னை அரசியல் அனாதையாக ஆக்காமல் விடமாட்டோம் என்று போராடுவதாக கூறுகிறீர்கள். யார் அரசியல் அனாதை? நான் தைரியமாக தனித்து நிற்கிறேன். நாம் தமிழர் கட்சி இன்று அரசியல் அங்கீகாரம் பெற்ற கட்சியாக வளர்ந்து இருக்கிறது. யாரை அரசியல் அனாதையாககுவோம் என்கிறீர்கள்?" என்று சீமான் கூறினார்.