கோவை: கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழுக் கூட்டம், வடகோவையில் உள்ள அரங்கில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்துக்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசும்போது, ‘‘அறுபடை முருகன் வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என ஒரு சிலர் கூறி வருவது தமிழகத்தில் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும். அதுமட்டுமல்லாமல், சிலர் சிக்கந்தர் மலை என்று பிரச்சாரம் செய்து, திருப்பரங்குன்றத்தின் மலை மீது அசைவ உணவை கொண்டு சென்று சாப்பிட்டுள்ளார். இது மதக்கலவரத்தை தூண்டும் செயலாகும்.
தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனையில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும். மீண்டும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, லட்சக்கணக்கான இந்துக்களை திரட்டி இந்து முன்னணி பேரியக்கம் சார்பில் பிப்ரவரி 4-ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இந்து முன்னணியின் மாநில மாநாடு வரும் ஜூன் 8-ம் தேதி என்று மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். வரும் 11-ம் தேதி தைப்பூசம் விழாவையொட்டி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் இந்த அரசாங்கம் செய்து தர வேண்டும்’’ என்றனர். இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் தனபால் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, இக்கூட்டத்தில் ஏராளமான நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.