தொகுப்பூதிய பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும்: கரூரில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்


கரூர்: கரூரில் தொகுப்பூதிய பணி நியமனத்தை ரத்து செய்யக்கோரி சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களில் ரூ.3,000 தொகுப் பூதியத்தில் பணி நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்து ஏற்கனவே உள்ள நடைமுறையின்படி சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்யக்கோரி கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று (ஜன.23ம் தேதி) உண்ணாவிரதம் நடைபெற்றது.

சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரம் கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட செயலாளர் சிங்கராயர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் கமலக்கன்னி சிறப்புரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கதுரை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பி.செல்லம்மாள் நன்றி கூறினார்.

அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்கக் கோரியும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதை போல அகவிலைப் படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750 வழங்கக் கோரியும் வலியுறுத்தப்பட்டன.

x