சென்னை: திமுக அரசுக்கு திராணி இருந்தால் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என்றும், தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், இதுவரை எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் வழங்கியது, அவ்வறிக்கைகள் மீது எடுத்து நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடலாமே? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னுடைய நேரடியான கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கத் திராணியற்று, அரசு விழாவில் பிதற்றியுள்ள திமுக-வின் பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம். திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதல்வரும், நிதி அமைச்சரும், அவர்களுக்கு ஏவல் புரியும் பல கட்சி தாவிய செந்தில் பாலாஜியும், என் மீது தேவையற்ற வன்மத்தைக் கக்குகிறார்கள். இதில் இருந்து, மக்கள் பணியில் நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்பதை உணர்கிறேன்.
ஜனவரி 22ம் தேதி அன்று சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், திமுக-வின் பொம்மை முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‘திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெட்டிப் பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?’ என்று பேசியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் திண்ணையில் அமர்ந்து போட்டோ ஷுட் நடத்தியதையும்; மனு கொடுப்பவர் ஆணா, பெண்ணா என்று கூடப் பார்க்காமல், மனுதாரர் என்ன கூற முயல்கிறார் என்பதைக் கூட கேட்காமல், எழுதிக் கொடுத்த நாடக வசனத்தைப் பேசி மக்களிடையே ஜோக்கராக காட்சியளித்ததையும், பொதுமக்களிடம் புகார் பெட்டியில் மனுக்களைப் போடவைத்து, பிறகு புகார் பெட்டியைப் பூட்டி, திமுக ஆட்சிக்கு வந்ததும், குறைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு, புகார் கொடுத்தவர்கள் எப்போது தலைமைச் செயலகம் வந்தாலும் முதல்வர் அறையில் தன்னை நேரடியாகப் பார்க்கலாம் என்று நாடகமாடியதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. புகார் பெட்டியில் போடப்பட்ட மனுக்களின் நிலை என்ன என்று இன்று வரை தெரியவில்லை. ஒருவேளை புகார் பெட்டியின் சாவி தொலைந்து விட்டதா என்று மக்கள் கேள்வி எழுப்பியது ஞாபகம் இல்லையா?
”திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசியதாகவும், அது வெட்டிப் பேச்சு” என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசினால், அது வெட்டிப் பேச்சாம். 2021 தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, நிறைவேற்ற முடியாத சுமார் 525 தேர்தல் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றது யார்? அவற்றில் சுமார் 53 வாக்குறுதிகள், மத்திய அரசை வலியுறுத்தி முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்று குறிப்பிட்டது யார்? ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும் தமிழக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் மற்றும் பணப் பயன் அளிக்கக் கூடிய கீழ்க்கண்ட ஒரு சில முக்கிய வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை
நீட் தேர்வு ரத்து; குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை; பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும்; தமிழக மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து; 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும்; எரிவாயு சிலிண்டர் ரூ.100 மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு; மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு; பகுதி நேர ஆசிரியர் பணி நிரந்தரம்; அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை; நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்; அரசு பொதுத் துறை நிறுவனங்கள் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்; மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும்; முதியோர் உதவித் தொகை 1500ஆக உயர்த்தப்படும், பாலியல் கொடுமை – பாதிக்கப்பட்டோர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்; தனிப் பிரிவுகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் . . . . என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போதும், பல்வேறு இடங்களில் பேசும்போதும், திமுக-வின் 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் 90 சதவீதத்திற்கும் மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்று பேசிய ஸ்டாலின், நேற்று சிவகங்கையில் பேசும்போது, திமுக-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என்றும், இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதிலிருந்தே முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் ஸ்டாலினின் பொய் முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
நாங்கள் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய ஜனநாயகக் கடமையின் படி, திமுக-வின் 525 தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற சட்டமன்றத்திலும், அறிக்கைகளிலும், பேட்டிகளின்போதும் அழுத்தம் கொடுத்தோம். எதிர்க்கட்சியாகிய நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திய பிறகு, 28 மாதங்கள் கழித்து, பல்வேறு நிபந்தனைகளுடன் மகளிர் உரிமைத் தொகையை வழங்கிய அரசு தானே இந்த ஸ்டாலின் மாடல் அரசு.
திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகையை உடனே வழங்கினார்கள். இதை ஸ்டாலின் உணராதது ஏனோ?
திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், எங்களது கட்சி நிர்வாகி ஜெகபர் அலி என்பவர் அம்மாவட்டத்தில் விடியா திமுக-வின் சட்டத் துறை மந்திரியின் தொகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை பற்றி, அரசின் அனைத்துத் துறையினரிடமும் புகார் அளித்துள்ளார். பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் மற்றும் கனிமவளத் துறைகளோ வேடிக்கை பார்த்தன. ஜெகபர் அலியின் புகார் கனிமவளக் கொள்ளையர்களின் கைகளுக்குச் செல்கிறது. எதிரிகளின் லாரி ஜெகபரி அலி மீது ஏற்றப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் பொதுவான விவரங்களான;
‘கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலி, எங்களது கட்சியில் அவர் வகிக்கும் பொறுப்பு, சமூக ஆர்வலராக அவர் செயல்பட்டு வருவது, கனிமவளக் கொள்ளை, திருமயம் வட்டாட்சியர், கனிமவளத் துறை உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தல், லாரி ஏற்றி சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்படுதல், இவரது கொலையின் பின்னணி குறித்து விசாரித்து, ஏவி விட்ட உண்மைக் குற்றவாளிகளைப் பிடிக்காமல், லாரி டிரைவர் உள்ளிட்டவர்களைக் கைது செய்து வழக்கை திசை திருப்ப நினைக்கும் காவல்துறை’
போன்றவற்றை யார் ‘எக்ஸ் வலைதளப் பதிவில்’ வெளியிட்டாலும், மேலே உள்ள வார்த்தைகளை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும். அறிக்கை என்றால் இன்னும் விவரமாக எழுதலாம். இந்தக் குற்றச் செயலை எதிர்க்கட்சியான நாங்கள் தெரிவிக்கும் போது, சட்டப்படி விரைந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, குற்றச் செயலை மடைமாற்ற காப்பி பேஸ்ட் என்று உளறித் திரிவது வெட்கக்கேடானது.
மேலும், 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களின்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகள் பற்றியும் அரசாணை எண் பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2011 மற்றும் 2016 தேர்தல் வாக்குறுதிகளை, அம்மாவின் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே தமிழக மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, 8 கிராமில் தாலிக்குத் தங்கம், குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி, 4 விலையில்லா ஆடுகள், விலையில்லா பசுமாடு, விலையில்லா மடிக் கணினி, ஏழை, எளியவர்களுக்கு பசுமை வீடுகள், இலவச வீட்டுமனைப் பட்டா, 5 லட்சம் முதியவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உதவித் தொகை 12,000-த்தில் இருந்து 18,000ஆக உயர்த்தி வழங்குதல், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், மகளிருக்கு இருசக்கர வாகன மனியம், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி, மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம், அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழுவின்படி ஊதிய உயர்வு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அதிகரிக்கப்பட்ட விடுமுறை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
மேலும், அம்மாவின் அரசு புதிய மாவட்டங்களையும், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டையும் வழங்கி, ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றினோம்.
நாங்கள், 90 சதவீதத்திற்கும் மேல் எங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். ஒரு சில அறிவிப்புகள், ஒன்றரை ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணங்களால் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது திமுக-தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது. ஜெயலலிதா அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டனவா என்று அரசு அதிகாரிகளைக் கேட்டாலே தெரிந்துவிடும். மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 ஆண்டுகளில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ.25,000 மானியத்துடன் 2.85 லட்சம் அம்மா இருசக்கர வாகனங்களை 740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மாவின் அரசு வழங்கியதை, பொம்மை முதல்வர் ஸ்டாலின் மூடி மறைக்கப் பார்க்கிறார். மேலும், 2011-2021 வரை சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அம்மா அரசு அறிவித்த 1704 அறிவிப்புகளில், 1,658 அதாவது 97 சதவீதம் அறிவிப்புகள் செயலாக்கப்பட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்றத்தில் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் உள்ளது.
அதேபோல், எங்களது கழக நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. அப்போது, 568 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் 566 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, 289 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. 277 திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மீதமுள்ள 2 திட்டங்களுக்கு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
தொடர்ந்து, ஸ்டாலின் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, தமிழ் நாடு திவாலாகிவிட்டது என்று புதுப் புரளியைக் கிளப்புகிறேன் என்றும், 2011-ல் திமுக உபரி வருவாயை விட்டுச்சென்றதாக மிகப் பெரிய பொய்யை பேசியுள்ளார்.
2009-2010ல் வருவாய்ப் பற்றாக்குறை 3,531 கோடி ரூபாய்; 2010-11ல் வருவாய்ப் பற்றாக்குறை 2,729 கோடி ரூபாய். எங்கே உபரி நிதியை இவர்கள் விட்டுச் சென்றார்கள்? மேலும், 2011 திமுக ஆட்சியின் இறுதியில் தமிழகத்தின் கடன் 1 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. பொம்மை முதல்வர் ஸ்டாலின் இந்தப் புள்ளி விவரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து, உண்மையைப் பேச வேண்டும்.
நான் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையிலும், ஜனவரி 21ம் தேதி அன்றைய எனது அறிக்கை மற்றும் பேட்டியின் வாயிலாகவும், இந்தியாவிலேயே தமிழகம் கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது என்றும்; கடன் மற்றும் வருவாய் அதிகரித்த நிலையில் மூலதனச் செலவு 50 சதவீதம் கூட மேற்கொள்ளப்படவில்லை என்றும் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தேன். அதற்கு நேரடியான நாகரீகமான பதில் ஸ்டாலினிடம் இல்லை.
நான், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற நீர்வளப் பணிகள், சாலைப் பணிகள், உருவாக்கப்பட்ட புதிய மாவட்டப் பணிகள், மருத்துவக் கட்டமைப்பு, கல்வி கட்டமைப்பு என பட்டியலிடுகிறேன். இதுபோன்ற எத்தனை வளர்ச்சித் திட்டப் பணிகளை திமுக கொண்டுவந்தது என்று மக்களுக்கு விளக்கட்டும். மக்களே இதுகுறித்து முடிவு செய்யட்டும். இதில், இவர் பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், நான் பொறாமைப் படுவதாகவும் கூறுகிறார். இதில் ‘சொல்லாததையும் செய்தேன்’ என்று அடிக்கடி புளித்துப்போன வசனம் வேறு.
அதேபோல், பதவிக்காக நாங்கள் முதுகு வளைந்து சேவை செய்தோம் என்று பொய் மேல் பொய் பேசியுள்ளார். இதே கேள்வியை நான் கேட்கிறேன். 1999-ல் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு, மத்திய பாஜக அரசில் வெட்கம் இல்லாமல் முக்கிய துறைகளைப் பெற்று அமைச்சர்களாக அங்கம் வகித்தது யார்? தற்போது, பாஜக தலைவர்களை முதுகு வளையக் கூப்பிட்டு, திமுக தலைவர் கருணாநிதியின் நாணய வெளியீட்டை வெட்கம் இல்லாமல் நடத்தியது யார்?
தொடர்ந்து, 2004 மற்றும் 2009-ல் மந்திரி பதவிக்காக திமுக தலைவர் கருணாநிதி மற்றும் குடும்பத்தினர் டெல்லியில் முகாமிட்டு, முக்கிய துறைகளில் மந்திரி பதவி பெற்றதுபோல், நாங்கள் 2014 மற்றும் 2019-ல் எந்த மந்திரி பதவியையும் பெறவில்லை. மேலும், 1999 முதல் 2011 வரை சுமார் 13 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த நீங்கள், தமிழ் நாட்டின் நலனுக்காக மத்திய அரசிடம் பெற்ற நிதி எவ்வளவு ? செயல்படுத்திய திட்டங்கள் எத்தனை ? உங்கள் குடும்பத்திற்காக சாதித்த, சேர்த்த, வாதாடிப் பெற்ற மந்திரிகளின் எண்ணிக்கை எத்தனை ? நில அபகரிப்புகள் எத்தனை ? தமிழ்த் திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது ? நீட் நுழைவுத் தேர்வு, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் ஆய்வு என்று தமிழகத்திற்கு விரோதமான அனைத்திற்கும் பிள்ளையார் சுழி போட்ட நீங்கள், மத்திய அரசில் அங்கம் வகித்ததை தமிழக மக்கள் எப்போதும் மறக்கமாட்டார்கள். அதனால் தான், 2011-ல் பெருந்தோல்வியை மக்கள் பரிசளித்தனர்.
நான், தொடர்ந்து சட்டமன்றத்திலும், பொது வெளியிலும், திமுக-வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி வருகிறேன். உண்மையில் இந்த திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு திராணி இருந்தால் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என்றும்; 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியில் அப்போதைய நிதியமைச்சர் வெளியிட்ட நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை போல், தமிழகத்தின் தற்போதைய நிதி நிலை குறித்தும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும், இதுவரை எத்தனை குழுக்கள் அமைக்கப்பட்டு அறிக்கைகள் வழங்கியது, அவ்வறிக்கைகள் மீது எடுத்து நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடலாமே ? தமிழக மக்கள் உண்மை நிலையை உணர்ந்துகொள்வார்கள்.
கடந்த 4 ஆண்டு கால திமுக ஆட்சியில், விலை வாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து மக்களை வாட்டி வதைக் கின்ற அரசு ஸ்டாலின் மாடல் அரசு. விலை வாசியைக் குறைக்க எந்தவொரு திட்டத்தையும் இந்த அரசு கொண்டுவரவில்லை. மூன்று முறை மின்கட்டண உயர்வு, ஏற்கெனவே இரு மடங்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, இனி ஆண்டு தோறும் 6 சதவீத உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, அனைத்து பதிவுக் கட்டணங்களும் பல மடங்கு உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு என்று மக்களின் மேல் அதிக சுமையை சுமத்தி வருவதுதான் ஸ்டாலின் மாடல் அரசு.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கள்ளச் சாராயம், மணல் கடத்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழ் நாடு உருவானதற்குக் காரணமான இந்த கையாலாகாத ஆட்சியில், தமிழக மக்கள் படும் சிரமங்களை சிறிதும் கவலைப்படாமல், அவற்றையெல்லாம் திசை திருப்பும் நோக்கத்துடன் செயல்படும் மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது நிதி நிலைமைப் பற்றியும், தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும், தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளைப் பற்றியும் நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.