சென்னை: 5,000 ஆண்டுக்கு முன்பு தமிழகத்தில் இரும்பு அறிமுகம் ஆகியுள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில் நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமானது நிரூபணம் என அவர் குறிப்பிட்டார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய அவர், “தமிழ் பண்பாட்டை உலகுக்கு சொல்லும் விழாவாக இது அமைந்துள்ளது. அண்மைக்கால அகழாய்வு முடிவுகள் வாயிலாக தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவில் இரும்புத் தாதுவில் இருந்து இரும்பினைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நிலப்பரப்பில் இரும்பு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிவியல் அடிப்படையில் நிறுவியுள்ளோம். 5,300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு எலும்பு தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகமானது. இது தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் - தமிழ் நிலத்துக்கும் பெருமை. உலக மானுட இனத்துக்கு தமிழ் நிலம் வழங்கும் மாபெரும் கொடை.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைக்கப் பெற்ற பொருட்கள் ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப் பட்டன. 3 நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளின் முடிவுகள் ஒரே மாதிரியானவையாக உள்ளன. கிமு 3,345ம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே தமிழ் நிலத்தில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்ற ஆய்வுப் பிரகடனத்தை அறிவிக்கிறேன்.இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் எழுதப்பட வேண்டும். அதனை மெய்ப்பிக்கும் ஆய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடர்ச்சியாகச் செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் நகர நாகரிகமும் எழுத்தறிவும் கிமு 6 நூற்றாண்டில் தொடங்கியது என்பதை கீழடி அகழாய்வு முடிவுகள் நிறுவியுள்ளன. பொருநை ஆற்றங்கரையில் 3,200 ஆண்டுகளுக்கு முன்னர் வேளாண் பயிர்தொழிலில் நெல் பயிரிடப்பட்டுள்ளது என்பதை சிவகளை அகழாய்வு முடிவு வெளிப்படுத்தியது. தமிழ்நாட்டின் இரும்பின் அறிமுகம் 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை அகழாய்வின் மூலம் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வாயிலாக நான் உலகிற்கு அறிவித்தேன்.
தமிழ் – தமிழ் நிலம் – தமிழ்நாடு குறித்து நாம் இதுவரை சொல்லி வந்தவை ஏதோ இலக்கியப் புனைவுகள் அல்ல,அரசியலுக்காகச் சொன்னவை அல்ல, வரலாற்று ஆதாரங்கள்! உலக அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை என்பதை மெய்ப்பிக்க வேண்டிய கடமையை இந்த திராவிட மாடல் அரசு எடுத்துக் கொள்கிறது” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.