ஈரோடு கிழக்கில் தொடங்கியது தபால் வாக்குப் பதிவு: சூடுபிடித்தது தேர்தல் களம்!


கோப்புப் படம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகளைப் பெறுகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்குப் பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையத்தில் கம்பி, தகரங்களால் ஆன தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தால், வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாக்கினை தபாலில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில், 209 முதியோர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்த தகுதி பெற்றுள்ளனர். இன்று தபால் வாக்குப் பதிவு துவங்கியுள்ளது. தகுதியானோர் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் இன்று முதல் ஜன.27ம் தேதி வரை வாக்குகளை பெறும் பணியில் ஈடுபடவுள்ளனர். இதற்காக 40 அதிகாரிகள் களத்தில் இறங்கியுள்ளனர்.

x