சென்னை: தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய 2 மாத நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் உள்ள 100 நாள் வேலை, 150 நாளாக உயர்த்தப்படும். சம்பளம் ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இதுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இத்திட்டத்தில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள். இந்த சம்பளத்தை நம்பியே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்க வேண்டியசம்பளத்தை, திமுக அரசு இன்றுவரை வழங்கவில்லை.
அதனால் பணம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு தைப் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையை ஏற்படுத்திய திமுக அரசை கண்டிக்கிறேன். இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், இத்திட்டத்தின் கீழ்வேலை வழங்கப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன. எனவே, 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.