3 வது முறையாக பிரதமராகியுள்ள நரேந்திர மோடி கச்சத்தீவை மீட்காதது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி


சென்னை: 2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம் என சொன்னவர்கள். இப்போது மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்காமல் இருப்பது ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”2014ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாடு நடத்தி பாஜக ஆட்சிக்கு வந்தால் கச்சத்தீவை மீட்போம், நரேந்திர மோடி பிரதமரானால் ஒரு தமிழக மீனவர் கூட தாக்குதலுக்கு உள்ளாகமாட்டார்கள், மீனவர் நலன்களைப் பாதுகாக்க மீனவர்களுக்கு என்று தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வகைவகையான வாக்குறுதிகளைக் கொடுத்து தேர்தலோடு காணாமல் போன கச்சத்தீவின் மீது கரிசனம் கொண்ட பிரதமரை 10 ஆண்டுகளில் எதையும் செய்யாத நிலையில் மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் ரகசியத்தைப் பெற்றதாக ஒரு அறிக்கையைத் தூக்கிக்கொண்டு வந்தபோது அதையும் நம்பி கச்சத்தீவை காங்கிரஸ் - திமுக தாரைவார்த்தது என்று சொன்னபோதுதான் பார்க்க முடிந்தது.

அதுவும் கூட 400 தொகுதிகளில் வெல்வோம் என்றுச் சொன்ன பிரதமருக்கு தமிழ்நாட்டில் 40ல் ஒன்று கூட கிடையாது என்று மக்கள் தந்த முடிவுக்குப் பின்னால் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அன்றோடு கச்சத்தீவு கதைக்கு போதிய வரவேற்பு இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டு தலைமறைவானவர் இப்போது மீண்டும் தலையெட்டிப் பார்க்கிறார். கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் சேர்க்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அண்ணாமலை கூறியபோது இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கேவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கை எல்லைக்குள் உள்ளது.

நரேந்திர மோதி அரசு இலங்கையுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அப்படி ஏதேனும் கூறப்பட்டால் அதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கும்” என்று கூறியுள்ளாரே. ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் எதையுமே தமிழ்நாட்டுக்குச் செய்யாமல் வஞ்சித்த பாஜகவை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள் என்று தெரிந்து கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பியவர் மீண்டும் மோடி மூன்றாவது முறையாக பிரதமரான பிறகும் மீட்கச்சொல்லாமல் இருப்பது ஏன் ?

கச்சத்தீவுக்குள்ளோ இலங்கை எல்லையிலோ தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை ஏற்க முடியாது அவர்களை கைது செய்வோம் சிறையில் அடைப்போம் என்று இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கா சொன்னபோதும் கூட அவரை வரவழைத்து கைகுலுக்கியதைத்தவிர பிரதமர் மோடியோ பாஜகவோ எதிர்வினையென்று இதுவரை செய்து என்ன ? கச்சத்தீவைப் பற்றி கவலைப்படும் பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவிற்குள் ஆக்கிரமிப்புகளை துணிந்து மேற்கொள்ளும் சீனாவிடம் நம் நிலங்களை தாரைவார்த்து அமைதி காப்பது பற்றி 56" மார்புகொண்ட கடவுளின் அவதாரம் பிரதமர் மோடி அவர்கள் மௌனம் சாதிப்பது ஏன் ? என்றாவது கேட்டதுண்டா?

(அன்னை இந்திராகாந்தி அவர்களின் ராஜ தந்திரம் என்று சொன்னதற்கு இவ்வளவு கொந்தளிப்பா!) மேலும் தந்தி டிவிக்கு ரணில் விக்கிரம சிங்கே அளித்த சிறப்பு நேர்காணலிலும் கச்சத்தீவு விவகாரம் குறித்த விளக்கம் மக்களின் பார்வைக்கு” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

x