டெல்டாவில் பருவம் தவறிய மழையால் பயிர் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வாசன் வலியுறுத்தல்


டெல்டாவில் பருவம் தவறிய மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்ட விளைநிலங்களில் தற்போது 20 முதல் 30 சதவீதம் வரை அறுவடை முடிந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழையால் அறுவடை செய்யமுடியாமல் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு, டெல்டா மாவட்டங்களில் மழை நீரில் மூழ்கி, வயலில் சாய்ந்து, அறுவடை செய்ய முடியாமல் உள்ள அனைத்து விதமான பயிர்களையும் சரியாக கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக அரசு மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளிலும் விவசாயிகளின் தேவைக்கேற்ப நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாக்கும் வகையில் போதுமான அளவில் தார்ப்பாய்கள் இருப்பில் இருக்க வேண்டும். பருவம் தவறி மழை பெய்வதால் நெல் மூட்டைகள் பாதிக்காதவாறு அவ்வப்போதே விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும். சில நெல்கொள்முதல் நிலையங்களில் எடை போடுவதில் குறை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுவும் சரிசெய்யப்பட வேண்டும். முக்கியமாக தொடர் மழை மற்றும் பனிமூட்டம் காரணமாக நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 17-ல் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x