பாளை. கூட்டத்தில் வாட்டர் பாட்டில்களுக்காக திமுகவினர் முண்டியடித்ததால் பரபரப்பு


திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற 500-க்கும் மேற்பட்டோருக்கு சில்வர் வாட்டர் பாட்டில்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அவற்றை பெறுவதற்காக டோக்கன்களுடன் பெண்களும், ஆண்களும் முண்டியடித்ததால் பரபரப்பு நிலவியது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளையொட்டி பாளையங்கோட்டை பகுதி திமுக சார்பில் ஜோதிபுரம் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வழக்கறிஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் அருள் மாணிக்கம் தலைமை வகித்தார். வர்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜேஷ் வரவேற்றார். திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான், மாநில சட்டத்துறை இணை செயலர் சூர்யா வெற்றிகொண்டான், திருநெல்வேலி மாநகர திமுக செயலர் சு.சுப்பிரமணியன், மாநகராட்சி மேயர் கோ. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது: நாடகமாடுவதில் வல்லவர்கள் என்று திமுகவினரை பார்த்து ஒரு இளைய தலைவர் பேசுகிறார். ஆனால் அவரே சினிமாவில் நடித்துதான் இந்நிலைக்கு வந்துள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அப்பகுதி மக்களே விரும்புகிறார்கள். கடந்த மக்களவை தேர்தலின்போது அதை சுற்றியுள்ள 13 கிராமங்களிலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருந்தன. ஆனால் அப்பகுதிகளுக்கு சில தலைவர்கள் சென்று மக்களை குழப்பி வருகிறார்கள்.

தமிழகத்தில் மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து அதிக திட்டங்களை திமுக ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம். கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு மகளின் வாக்குகள் முக்கியமாக இருந்தன. பல வாக்குச் சாவடிகளில் பெண்களின் வாக்குகள் 85 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் திமுகவுக்கு பதிவாகியிருந்தது. மக்கள் எப்போதும் திமுகவின் பக்கம் உள்ளனர். வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டம் முடிவடைந்து மேடையிலிருந்து திமுக பிரமுகர்கள் சென்ற பின்னர், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலையாமல் அங்கேயே திரண்டிருந்தனர். அவர்களது கைகளில் டோக்கன்கள் இருந்தன. சிறிது நேரத்தில் லோடு ஆட்டோவில் சில்வர் வாட்டர் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டு, பொதுக்கூட்ட திடலிலேயே அவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. டோக்கன் வைத்திருந்த ஆண்களும், பெண்களும் முண்டியடித்து கொண்டு அவற்றை பெற்றுச் சென்றனர்.

ரூ.200 மதிப்புள்ள அந்த பாட்டில்கள் அடைக்கப்பட்டிருந்த பெட்டியின்மீது வாக்களிப்பீர் உதயசூரியன் என்று உதயசூரியன் சின்னமும், தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, டிபிஎம் மைதீன்கான், திருநெல்வேலி மாநகர செயலர் ஆகியோரின் புகைப்படங்களுடன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மைக்கேல் எஸ். ராஜேஷின் பெயரும், புகைப்படமும் அச்சிட்டிருந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

x