ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 8 பேருக்கு ரூ.35 லட்சம் அபராதம் விதித்து இலங்கையில் உள்ள கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற முகேஷ்குமார், மரிய ரெட்ரிக்ஷன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு படகுகளில் களங்சியம், முனிஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரியன், சவேரியார் அடிமை, மரிய ஜான் ரெமோரோ, பிரிஸ்மன் ஆகிய 8 மீனவர்கள் வடக்கு மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கடந்த 12-ம் தேதி சிறைப்பிடித்தனர்.
மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் இன்று (புதன்கிழமை) நிறைவடைந்ததை தொடர்ந்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜமீல், 6 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு மாதம் சிறை தண்டனை, இரண்டு படகு ஓட்டுநர்களுக்கு தலா இலங்கை ரூ.60 லட்சம் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
8 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் ரூ.1 கோடியே 23 லட்சம், இந்திய மதிப்பில் ரூ.35 லட்சம் அபராதம் ஆகும். தொடர்ந்து மீனவர்கள் 8 பேரும் மீண்டும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.