டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யும் சாதகமான முடிவு அறிவிக்கப்படும்: அண்ணாமலை அறிவிப்பு


சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள் உறுதி அளித்துள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்றைய தினம், புதுடெல்லியில், மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களை, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் உள்ள வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் குழுவுடன், மாண்புமிகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசினோம்.

மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, நமது மத்திய சுரங்கத்துறை அமைச்சர் அவர்கள் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு உறுதியளித்தார்.

மேலும், மேலூர் தொகுதி விவசாயப் பெருமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்யும் வகையில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும், மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.

x