மின்வாரியம் போல் போக்குவரத்து கழக கடனையும் அரசே செலுத்த வேண்டும்: சிஐடியு வலியுறுத்தல் 


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்திய சிஐடியூ தொழிற்சங்கத்தினர். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: 'மின்வாரிய கடனை அடைத்தது போல் போக்குவரத்து கழக கடன்களையும் தமிழக அரசே அடைக்க வேண்டும்' என மதுரையில் சாலை மறியல் போராட்டம் நடத்திய சிஐடியு தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்க சிஐடியூ பொதுச் செயலாளர் பி.எம்.அழகர்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ரா.தெய்வராஜ், மாவட்ட செயலாளர் ரா.லெனின், மாவட்டத் துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் அரசு போக்குவரத்து மாநில சம்மேளான உதவி தலைவர் வீ.பிச்சை, அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கத் தலைவர் மாரியப்பன் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சிஐடியு ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நல சங்க தலைவர் எஸ். அழகர், பொதுச் செயலாளர் ஆர். வாசுதேவன் உள்ளிட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அழகர்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தொடங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து அகவிலைப்படி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஏப்ரல் 2023 முதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய கால பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும், வாரிசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முதலீடு செய்தது போல், மின்வாரிய கடனை அடைத்தது போல், போக்குவரத்துக் கழகங்களின் கடனை அடைக்கவும், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறினார்.

x