சென்னை: ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவினருக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கியதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அருணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இதுதொடர்பாக பாஜக வழக்கறிஞரான ஏற்காடு ஏ.மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுத்து கைது செய்ய மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவினருக்கு மட்டும் விதிகளை மீறி அனுமதியளித்துள்ளார்.
4 வார அவகாசம்: ஏற்கெனவே ஜன. 6 முதல் ஜன.21 வரை 15 நாட்களுக்கு சென்னையில் எந்தவொரு ஆர்ப்பாட்டமோ, போராட்டமோ, ஊர்வலமோ நடத்தக் கூடாது என தடை விதித்துள்ள போலீஸார் அனுமதியின்றி ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய திமுகவினருக்கு எதிராக மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சென்னை மாநகர காவல் ஆணையரான அருண் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், எதிர்க்கட்சிக்கு எதிராகவும் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எனவே சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலர், தமிழக டிஜிபி, காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.