விழுப்புரம்: பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே பூரிக்குடிசை கிராமத்தில் கள் விடுதலை மாநாடு இன்று தமிழ்நாடு கள் இயக்க தலைவர் நல்லசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசியதாவது, “கள் என்று சொல்லாமல் அதை பனஞ்சாறு என்றும் மூலிகைச்சாறு என்று சொல்லலாம். கள் குடித்து இறந்தவர் இல்லை. புதுச்சேரி உள்பட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் ஏன் கள்ளுக்கு தடை?
கள் மது என்றால் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுவது என்ன என கேள்வி எழுகிறது. எந்த மாநில முதல்வருக்கும் சாராய தொழிற்சாலை கிடையாது. தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கு சாராய ஆலை உள்ளது. சட்டசபையில் மது விற்பனையை உயர்த்த நடவடிக்கை என பேசுகிறார்கள். கடந்த பொங்கல் இரண்டு நாட்களில் ரூ 725 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இத்தனை கோடியில் குடிப்பவனுக்கு ஏன் இலவசம்?
ஒரே நாளில் நூறு வழக்கு வாங்கியவன் இந்தியாவிலேயே நான் ஒருவன் மட்டுமே. ஈரோடு இடைத்தேர்தல் களத்தில் இருவர் தான். களம் எங்களுக்கானது. நான் ஒருவன் தான் போட்டியிடுகிறேன். ஆனால் பல அமைச்சர்களை அனுப்பியும், கூட்டணி கட்சிகள் இருந்தும் வாக்குக்கு காசு கொடுப்பது ஏன்?
பெரியார் பெரியார் என்று பேசுபவர்கள். பெரியாரைப் பற்றி பேசி வாக்கு கேளுங்களேன். பெரியார் பெண்கள் குறித்து தாலி அடிமை சின்னம் அதனை அறுத்து எரியவேண்டும், கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுவது காட்டுமிராண்டித்தனம் என பேசியுள்ளார். பெண்கள் கருப்பையை அறுத்து எரிய சொல்லியுள்ளார். மது குடிப்பதை தடுப்பது மனைவியுடன் உறவு வைக்கக்கூடாது என கூறுவது போன்றது என கூறியுள்ளார்.
பெரியார் பேசியதை கூறி வாக்கு கேளுங்களேன். பெரியாரை எதிர்ப்பது மதவாதத்திற்கு ஆதரவாக உள்ளது என கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்திற்கு எதிரானவர்?. திராவிடமும், ஆரியமும் வெவ்வேறு கிடையாது இரண்டும் ஒன்றுதான்” என்று அவர் கூறினார்