சென்னை: கோமியம் மருத்துவ குணமிக்கது என்ற ஐஐடி இயக்குனர் காமகோடியின் கருத்து கண்டனத்திற்குரியது. காமகோடி அவர்கள் சொல்வது போல் கோமியம் நோய்களை குணப்படுத்தாது, மாறாக அது பல மோசமான நோய்களையே உருவாக்கும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த தகவல்களின்படி, ‘சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி-யின் இயக்குநர் காமகோடி, "என் தந்தை ஜூரத்தில் இருந்தபோது, சன்னியாசி ஒருவர் வந்தார். கோமூத்திரம் (கோமியம் ) குடிக்கச் சொன்னார். என் தந்தை குடித்ததும் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகி விட்டது. கோமூத்திரத்தில் கிருமி நாசினிகள், ஜீரண மண்டலத்துக்கு தேவையான பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
அறிவியலுக்கு புறம்பான அவரது இக்கருத்து கடும் கண்டனத்திற்குரியது. அவரது கருத்து பல மோசமான விளைவுகளை உருவாக்கும். மக்களின் நலவாழ்வுக்கும், பொது சுகாதாரத் துறைக்கும் கேடு பயப்பதாகும். பசுவின் மூத்திரத்தில் நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளை கொல்லும் மருத்துவத் தன்மை உள்ளது, அதைக் குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிடும் எனக் கூறுவது, பல்வேறு வகை காய்ச்சல்களால் பாதிக்கப்படும் மக்களை, அறிவியல் ரீதியான சிகிச்சை வழங்கி குணப்படுத்துவதில் எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்.
ஒரு மிகப்பெரிய அறிவியல் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் கூறும் அறிவியலற்ற கருத்தை நம்பி காய்ச்சல் வந்த மக்கள், கோமியத்தை குடித்து விட்டு காய்ச்சல் குணமாகி விடும் என தவறாக நம்பிக்கைக் கொண்டு இருந்தால், அதனால் இறப்புகள் கூட ஏற்பட்டுவிடும் நிலை உருவாகலாம். இன்றைய காலத்தில் டெங்கு, கரோனா, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, மூளைக் காய்ச்சல் போன்ற பல உயிருக்கு ஆபத்தை உருவாக்கும் காய்ச்சல்கள் ஏற்படுகின்றன. உரிய பரிசோதனைகள் மூலம் என்ன காய்ச்சல் என்பதை உறுதி செய்து, உரிய சரியான சிகிச்சைகளை உடனடியாக குறித்த நேரத்தில் வழங்காவிட்டால் உயிரிழப்பு ஏற்பட்டுவிடும்.
எந்தக் காய்ச்சலாக இருந்தாலும், உடனடியாக மருத்துமனைகளுக்குச் செல்ல வேண்டும், மருத்துவர்களை நாட வேண்டும், அறிவியல் ரீதியாக சிகிச்சைகள் பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், அறிவியலுக்கு புறம்பாக கோமியத்தை குடித்தால் 15 நிமிடத்தில் காய்ச்சல் குணமாகிவிடும் என்ற பொருளில், மக்களுக்கு தவறான நம்பிக்கையை உருவாக்குவது என்பது போதிய அறிவியல் விழிப்புணர்வு இல்லாத மக்களை பாதிக்கும். காய்ச்சலால் பாதிக்கப்படும் நிலைமையில் அவர்கள் கோமியத்தை குடித்துவிட்டு இருந்தால் இறப்பு நேரிடலாம்.
இந்த ஆபத்தை உணராமல், ஐஐடி இயக்குனர் கோமியத்தின் மருத்துவத் திறன் பற்றி பேசியிருப்பதும், அதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதும் பொறுப்பற்ற செயலாகும். மக்களின் நலவாழ்விற்கும், பொது சுகாதாரத்திற்கும் எதிரானதாகும். காய்ச்சல் வந்தால் உரிய சரியான சிகிச்சைகளை பெற வேண்டும் என்ற விழிப்புணர்வை மழுங்கடிக்கும் செயலாகும். மக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்க வேண்டும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களுக்கு எதிரானதாகும். மக்களின் நலன்களுக்கும், பொது சுகாதாரத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரானதாகும்.
கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரி தொற்றுகள் ஏற்படலாம். எலிக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். பசு மாட்டுச் சாணம் மூலம் ஜியார்டியாசிஸ் என்ற வயிற்றுப் போக்கு, நாடாப்புழு பாதிப்பு, மேட் கவ் டிசீஸ், (mad cow disease) என்ற மோசமான மூளையை பஞ்சுபோல் மாற்றும் நோய், கறுப்பு பூஞ்சை தொற்று, ரைனோ ஸ்பொரிடியோசிஸ் போன்ற பல நோய்கள் ஏற்படலாம். காய்ச்சாத அல்லது நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படாத பால் மூலம் டைஃபாய்டு, காசநோய் போன்றவை ஏற்படலாம். பஞ்சகவ்யம் மூலமும் மேற்கண்ட தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படலாம்.
எனவே, காமகோடி சொல்வது போல் கோமியம் நோய்களை குணப்படுத்தாது, மாறாக அது பல மோசமான நோய்களையே உருவாக்கும். இதை இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் உட்பட பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. ஆகவே, அவரது கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்களை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது" என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.