மருத்துவக்கல்லூரிகள்; தமிழகத்தை 3ம் இடத்திற்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது உ.பி - தமிழிசை அறிக்கை


சென்னை: இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது உத்தரபிரதேசம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகத்தை மூன்றாவது இடத்திற்கு தள்ளி முதலிடம் பெற்றுள்ளது உத்தரபிரதேசம். இன்றைய நிலையில் அகில இந்திய அளவில் அதிக மருத்துவக் கல்லூரிகளை கொண்டுள்ள மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது உத்தரப்பிரதேசம், இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாம் இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.

இச்சூழ்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறைந்துவிட்டதாக விமர்சனம் செய்துள்ளார்கள். மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை நிர்ணயிக்கும் உச்சபட்ச அமைப்பான தேசிய மருத்துவ மேலாண்மை கவுன்சில் அனுப்பியுள்ள முன்னெச்சரிக்கை தற்காலிக சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஏறக்குறைய 60 ஆண்டுகள் இந்தியாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட தற்சமயம் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 105% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 40,000 பேர் சேர்ந்து கொண்டிருந்த மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் இடங்கள் ஆண்டுக்கு 1,10,000 என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் எண்ணிக்கை அதிகரித்ததனால் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மருத்துவர்களின் தேவையை அறிந்து கொண்டு மருத்துவ படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்குத் தேவையான ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பதை கவனத்தில் கொண்டு அதற்கான சில விதிமுறைகளை மாற்றியதற்கான கருத்தாய்வு கேட்டிருக்கிறது. தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக மத்திய அரசு நியமிக்க போவதில்லை. ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றி தகுதி பெற்றவர்கள் அவர்களின் அடிப்படைத் தகுதிகளில் சில மாறுதல்களை செய்துள்ளது.

உதாரணத்திற்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் பணியாற்றிய மருத்துவ ஆசிரியர்கள் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் என்பதை 4 ஆண்டுகளாக உயர்த்தியிருக்கிறது. உதவி பேராசிரியர்களாக இருந்து பேராசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதை 8 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகளாக குறைத்து இருக்கிறது. இது போன்ற ஏற்பாடுகள் செய்வது தவிர்க்க முடியாது.

ஏனென்றால் நாட்டில் தேவைப்படும் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மருத்துவர்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளை அதிகரிக்கும் போது மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் போது மருத்துவ ஆசிரியர் பற்றாக் குறை ஈடு செய்வதற்காக ஏற்கனவே மருத்துவ ஆசிரியர் ஆக பணியாற்ற தகுதி பெற்ற உச்சபட்ச அனுபவ தகுதிகளில் சில ஆண்டுகளை குறைத்து தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதே தவிர தகுதியற்றவர்களை மருத்துவர ஆசிரியர்களாக பணியமர்த்தப் போவதில்லை.

வழக்கம் போல் இது போன்ற புரிதல் இல்லாமல் ஜெய் ராம் ரமேஷ் போன்ற மூத்த அரசியல் வாதிகள் பேசி வருவது கண்டிக்கத்தக்கது. கரோனா காலத்தில் உள் நாட்டிலேயே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு விழிப்புணர்வுடன்‌ செலுத்திக் கொள்ள வைத்து பெரும் உயிர் இழப்பை தடுத்தது நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு. கரோனா தடுப்பூசியை மற்ற நாடுகளுக்கும் கொடுத்து உதவியது. உலக நாடுகளெல்லாம் நம் பாரத தேசத்தை வெகுவாக பாராட்டினார்கள். இந்தியா முழுவதும் ஒரே ஒரு எய்ம்ஸ் இருந்த நிலை மாறி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகளில் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் இயங்கி வருகிறது.

அதேபோல மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்துள்ளது பட்ட மேற்படிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மருத்துவ தேவை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மருத்துவர்கள் பற்றாக்குறை,செவிலியர்கள் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு மருத்துவப் படிப்புகள் மற்றும் செவிலியர் படிப்புகள் இடங்களையும் அதிகரித்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து மத்திய அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையெல்லாம் முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் பொறுப்பற்ற முறையில் குற்றம் சாட்டியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று தமிழிசை தெரிவித்துள்ளார்

x