சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் தூய்மைப் பணி தொடக்கம்


சென்னை: சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் முழுவதும் உள்ள நடைபாதைகளை பாதசாரிகள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்றவகையில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்றிரவு தொடங்கி நடைபெற்றது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப் பாதைகள் ஆகிய பகுதிகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு, குப்பைகள், கட்டடக் கழிவுகள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், புற்கள் மற்றும் புதர்ச் செடிகள், பயனற்ற பொருட்கள் அகற்றப் பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் பேருந்து சாலைகள் முழுவதும் உள்ள நடைபாதைகளை பாதசாரிகள் பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்ற வகையில் நேற்று ஜனவரி 20ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரை இரவு நேரங்களில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்றது.

இப்பணியின் போது நடைபாதைகளில் உள்ள குப்பைகள், கட்டடக் கழிவுகள், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்கள், தேவையற்ற இன்டர் நெட் மற்றும் மின் கேபிள்கள் அகற்றுதல், பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள பிற பொருட்களை அகற்றுதல், சாலையோர மின் விளக்குகளை மறைக்கும் வகையில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், நடைபாதைகள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப் பணி நடவடிக்கைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணியில் நடைபாதைகளில் உள்ள சிறு, சிறு பழுதுகள் கணக்கீடு செய்யப்பட்டு, மதிப்பீடுகள் தயாரித்து அவற்றை சரி செய்யும் நடவடிக்கைகளும், சாலையின் சம உயர அளவில் அமைந்துள்ள நடைபாதைகள் கணக்கிடப்பட்டு, பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக அந்த இடங்களில் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கைப்பிடிகள் (Stainless Steel Railing) அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x