பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா? - ஐஐடி இயக்குநருக்கு எஸ்டிபிஐ கண்டனம்


சென்னை: பசு மாட்டின் சிறுநீருக்கு நோயைப் போக்கும் மகத்துவமா?. உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கேலிக்கூத்தாக்கி வருகின்றார் பேராசிரியர் காமகோடி. ஆகவே, அவரை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”சென்னையில் கடந்த ஜனவரி 15 அன்று மாம்பலம் கோசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் காமகோடி, கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு துறவி, கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்திய பதினைந்து நிமிடங்களில் அவரது உடல்நலம் தேறியதாகக் கூறி, பசுவின் சிறுநீரில் மருத்துவக் குணங்கள் உள்ளன, அது பாக்டீரியாக்களை அழிக்கும், பூஞ்சைகளை ஒழிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறியுள்ளார்.

இந்த உரை, மத்திய பாஜக ஆட்சியில் நாடு எத்திசையை நோக்கிச் செல்கிறது என்பதற்கான ஒரு தெளிவான எடுத்துக் காட்டாகும். மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தவறான போலியான பரப்புரைகள் மூலம் வரலாறுகளை, வரலாற்றுப் பாடங்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொரு புறம் அறிவியலுக்குப் புறம்பான இதுபோன்ற கருத்துக்களைத் திணிக்கும் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.

ஐஐடி-கள் தான் இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்ப பொறியியல் கல்வி நிறுவனங்கள். அதிலும் சென்னை ஐஐடி தான் நாட்டிலேயே தலை சிறந்த நிறுவனங்களில் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது. மருத்துவ அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத கருத்துகளை உண்மை போன்று திரித்துக் கூறியுள்ள காமகோடி, ஐஐடி நிறுவனத்துக்கு தலைமை வகிக்க லாயக்கற்றவர் என்பது அவரின் உரை உறுதிப்படுத்துகிறது.

ஏற்கனவே, பசு மாட்டுச் சிறுநீர் குறித்துக் கட்டவிழ்த்து விடப்படும் கட்டுக்கதைகளுக்கு எதிராக, இந்திரப் பிரஸ்தாப பல்கலைக் கழக பயோ டெக்னாலஜி துறைப் பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான ரகு ராம் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாட்டு மூத்திரத்தில் 14 வகையான ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால் அது நேரடியாகக் குடிப்பதற்குத் தகுந்த ஒன்றல்ல என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக கரோனா தொற்று பரவலின் போது, கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் தீர்வு காண முடியும் என பேரா.காமகோடி போல் சிலர் செய்திகளைப் பரப்பி வந்த நிலையில், பசு சிறுநீர் வைரஸை குணப்படுத்தும் என்ற கூற்றுகளுக்குப் பின்னால் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் முன்னாள் இயக்குநர் கிருதி பூஷண் தெரிவித்தார். அப்போதைய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனும், கைகளைக் கழுவுதல், உடல் ஆரோக்கியத்தைப் பேணுதல், அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் மருத்துவமனையை நாடுதல் என்ற எளிமையான முன்னெச்சரிக்கை விஷயங்களை மட்டுமே கடைப்பிடிக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால், அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் மிக உயர்ந்த தரத்தில் ஊக்குவிக்க வேண்டிய தலையாய பொறுப்புள்ள நிறுவனத்தின் இயக்குநராக இருந்துகொண்டு, உயரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைக் கேலிக் கூத்தாக்கி வருகின்றார் பேராசிரியர் காமகோடி. இவர் தலைமையில் சென்னை ஐஐடி செயல்படுமானால் அது அந்நிறுவனத்தில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களைப் பாழாக்கிவிடும். ஆகவே, பேராசிரியர் காமகோடியை உடனடியாக அப்பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

x