டெல்டா மாவட்டங்களில் 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் கடந்த 2002-03 காரிப் பருவம் முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முகவராக செயல்பட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து கொள்முதல் செய்தால், டெல்டா விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து, கடந்த 2022–23 காரிப் பருவத்தில் இருந்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2024 செப்டம்பர் 1 முதல் இந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை 1,349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 80,634 விவசாயிகளிடம் இருந்து 5.72 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1,378 கோடி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தற்போது வரை மத்திய அரசு அனுமதித்துள்ள 17 சதவீத ஈரப்பதத்தில் தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்தில் உள்ளன. வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் நெல்லை உலர வைக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், தற்போது உள்ள 17 சதவீத ஈரப்பதம் என்பதை தளர்வு செய்து, 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.