கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்: முத்தரப்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


விருதுநகர்: கரும்புக்கான நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் முழுத் தொகையையும் வழங்கிய பின்னரே ஆலை நிர்வாகம் அரவையைத் தொடங்க வேண்டும் என்றும் முத்தரப்புக் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு கொள்முதல் செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை நிர்வாகம் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பிர்தௌஸ் பாத்திமா தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், கரும்பு விவசாயிகள், தென்காசி மாவட்டத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை, சிவங்கையில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை மற்றும் தேனியில் உள்ள ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திர ராஜா மற்றும் கரும்பு விவசாயிகள் கூறியபோது, ”தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கடந்த 2018-19ம் ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே வழங்கியுள்ளது. மேலும், சுமார் ரூ.7 கோடி வரை நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. தற்போது முழு நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும்.

விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்த 15 நாட்களுக்குள் அLற்கான தொகையை சர்க்கரை ஆலை விடுவிக்க வேண்டும். எனவே, அரசு இதற்கு பொறுப்பேற்று விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை அரசே வழங்க வேண்டும். நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கரும்பு ஒரு லாரிக்கு 14 டன் இருந்தால்தான் போக்குவரத்துத் செலவு கொடுப்போம் என ஆலை நிர்வாகம் கூறுகிறது.

10 டன் வரை இருந்தாலே அதற்கான போக்குவரத்து செலவை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும். வெட்டுக்கூலி ரூ.700 முதல் ரூ.1,400 வரை வசூலிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் ஒரே மாதிரியான வெட்டுக்கூலி மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். அரசு ஆணைப்படி 4 சதவிகிதம் மட்டுமே கழிவாக கணக்கிடப்பட வேண்டும். ஆனால், 7 சதவிகிதம் வரை கழிவு கணக்கிடப்படுவதை ஆலை நிர்வாகம் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதையடுத்து, தரணி சர்க்கரை ஆலை பொது மேலாளர் ஆறுமுகம் பேசுகையில், விரைவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுவதும் வழங்கப்படும். அதன் பின்னரே ஆலை நிர்வாகம் அரவையைத் தொடங்கும். இதில் விவசாயிகளுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் எனத் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள் பேசுகையில், ”விவசாயிகளின் கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். வெட்டுக்கூலி ஒரே மாதிரி வசூலிக்கப்பட வேண்டும். 10 டன் ஏற்றினாலும் லாரிக்கான போக்குவரத்துச் செலவை ஆலை நிர்வாகம் ஏற்க வேண்டும். இதுதொடர்பாக அரசு உத்தரவுகளை ஆலை நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

x