புதுச்சேரி: புதிதாக மதுபான ஆலைகள் புதுச்சேரிக்கு தேவையில்லை. அனுமதி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக் கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தெரிவித்தார்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது: ”புதுவை அரசு தீபாவளிக்கு இலவச அரிசியை ரேஷன் கடை மூலம் வழங்கியது. ஆனால் அதன் பின்னர் ரேஷன் கடைகளை திறக்கவில்லை. இலவச அரிசியை வழங்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளமும் தரவில்லை. என்ன காரணத்துக்காக ரேஷன் கடைகளை திறந்து அரிசி தரவில்லை என்று முதல்வர் தெரிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட புதுவை மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.
அதிகம் பாதிக்கப்பட்டோருக்கும், விவசாயிகள், முழுமையாக வீடு இழந்தவர்களுக்கு இதுவரை நிவாரணம் தரவில்லை. மத்திய அரசு புயல் சேதத்தை பார்வையிட்ட வந்த குழுவினர் அறிக்கை விவரம் என்னவானது என தெரியவில்லை. மத்திய அரசும் நிவாரணம் புதுச்சேரிக்கு தரவில்லை. மத்திய அரசிடம் நிவாரணத் தொகையை புதுச்சேரி அரசு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசில் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை. எம்பிசி, இஸ்லாமியர் இடஒதுக்கீடு கடைபிடிக்கவில்லை. இது குறித்து துணை நிலை ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும். மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம். புதிதாக மது ஆலைகள் தேவையில்லை. அதேபோல் ரெஸ்டோ பார்கள் தொடர்பாகவும் நீதிமன்றம் செல்வோம். இந்த இரு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.
புதுவை தொழில் நுட்பப் பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் கைது நடவடிக்கை சரியாக இல்லை. இதில் முதல்வர், கல்வியமைச்சர் மவுனம் கலைக்காமல் உள்ளனர். இதில் ஆளும் கட்சியினர் தலையீடு உள்ளது. போலீஸார் தாமதமாக செயல்படுகின்றனர். மாணவியிடம் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்தி உரியவர்களை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் போராட்டம் நடத்தும்- ஆனால் நாங்கள் சவுக்கு எடுத்து அடித்து கொள்ள மாட்டோம்.
தமிழக அண்ணா பல்கலைக் கழக விவகாரம் தொடர்பாக அங்குள்ள பாஜக தலைவர் சாட்டையால் அடித்துகொண்டார். அதே நேரத்தில் இங்குள்ள பாஜக தலைவர் அடித்துக் கொள்வில்லை. புதுச்சேரி மாணவி பாதிப்பு தொடர்பாக நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். இதில் அரசியல் அல்ல. மாணவி என்றே பார்க்கிறோம்" என்று வைத்திலிங்கம் குறிப்பிட்டார்.