இன்று பரந்தூரில் மக்களை சந்திக்கிறார் தவெக விஜய்: முழு பயணத்திட்டம்.. என்னென்ன கட்டுப்பாடுகள்?!


இன்று பரந்தூரில் போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதற்காக நடிகரும், தவெக தலைவருமான விஜய் புறப்பட்டுள்ளார்.

சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,000 ஏக்கரில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருவதை எதிர்த்து அப்பகுதியில் உள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், 900 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நேரில் சந்தித்து பேச தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை புறப்பட்டார். முதலில் பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அருகிலேயே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து போராட்டக்காரர்களை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களைத் தவிர வேறு யாருக்கும் திருமண மண்டபத்தில் அனுமதியில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

அதே போல விஜய் உட்பட குறிப்பிட்ட சில கட்சி நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் தவெக தொண்டர்கள், பரந்தூர் பகுதிக்கு கட்டுப்பாடுகளை மீறி வர வேண்டாம் என விஜய் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“முதலில் ஊருக்குள் சென்று மக்களை நேரடியாக சந்திக்க தான் திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்கு பாதுகாப்பு கருதி அனுமதி தரப்படவில்லை. இது குறித்து தளபதி ’மக்களை சந்திக்க தானே வருகிறேன். எங்கு சந்தித்தால் என்ன? அவர்கள் (காவல்துறை) எங்கு கூறுகிறார்களோ அங்கு சந்திக்கிறேன்’ என கூறிவிட்டார்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11 மணி முதல் 1 மணிக்குள் ஏகனாபுரத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊர்மக்கள் நடிகர் விஜய் சந்தித்துப் பேசவுள்ளார். நடிகர் விஜய்யை சந்திக்க வரும் போராட்ட குழுவினருக்கு காலை ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வழங்க தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

x