யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் கலாச்சார மையம் என மறுபெயரிட்டிருப்பதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சியில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாச்சார மையத்துக்கு ‘திருவள்ளுவர் கலாச்சார மையம்’ என்று மறுபெயரிட்டுள்ளது. இது, தமிழின் பெருமையை பரப்புவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல்லாகும். இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாச்சாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.