தமிழக காவல் துறையில் ஆயுதப்படை பிரிவு டிஜிபியாக உள்ள மகேஷ் குமார் அகர்வால் அயல் பணியாக எல்லை பாதுகாப்பு படை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் ஆயுதப்படை பிரிவு டிஜிபியாக பணியிலிருந்தவர் மகேஷ் குமார் அகர்வால். இவர், அயல் பணியாக மத்திய அரசு பணிக்கு செல்ல தமிழக அரசிடம் அனுமதி கோரி இருந்தார். அதன்படி, அவருக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது. மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் இதற்கு சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில், அவர் எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக பிறப்பித்துள்ளது. டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் 4 ஆண்டுகள் வரை அயல் பணியாக இந்த பணியை கவனிப்பார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே தமிழக காவல்துறையைச் சேர்ந்த டிஜிபி சஞ்சய் அரோரா தற்போது டெல்லி காவல் ஆணையராக உள்ளார். இதேபோல், டிஐஜி ரம்யா பாரதி, எஸ்பி அரவிந்தன் உள்பட பல போலீஸ் அதிகாரிகள் தமிழக காவல்துறையில் இருந்து அயல்பணியாக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர்.
தற்போது, மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். அவர் 22 வயதிலேயே 1994ல் ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்றார். பின்னர், அவர் அதே ஆண்டில் தமிழக காவல்துறை பிரிவுக்கு சேர்க்கப்பட்டார். வழக்கறிஞர் பட்டப்படிப்பு படித்திருந்த இவர் சென்னை காவல் ஆணையராகவும் பதவி வகித்தார். அப்போது, காவல் துறையைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் பலருக்கு உயர்கல்வி பெற வழி வகை செய்தார். மேலும், வேலை வாய்ப்பு பெறவும் நடவடிக்கை மேற்கொண்டு பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.