கோவை: ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தனது கழுத்தில் அணிந்துள்ள தங்க சங்கிலியில் புலி நகம் பதித்துள்ளதாகவும், ஆந்திராவில் இருந்து வாங்கியதாகவும் சமூக வலைதளத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில் அவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக, வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராமநாதபுரத்தில் உள்ள தொழிலதிபர் பாலகிருஷ்ணன் வீட்டில் வனத்துறையினர் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது பாலகிருஷ்ணன் வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் சோதனையில் ஒரு புள்ளிமான் கொம்பின் துண்டு பகுதி வீட்டில் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் புள்ளிமான் கொம்பு பகுதிகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து புள்ளி மான் கொம்பின் பாகங்கள் தொடர்பாக வனத்துறை வழக்குப்பதிவு செய்தது.
வெளியூர் சென்றிருந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணன் வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை ஆஜரானார். இதையடுத்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் பதித்த தங்க சங்கிலியை வனத்துறை அதிகாரிகள் வாங்கினர்.
இதனிடையே புள்ளிமான் கொம்பு மற்றும் புலி நகம் பதித்த தங்க சங்கிலி அணிந்திருந்த தொழிலதிபர் பாலகிருஷ்ணனை வனத்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து, கோவை வனக்கோட்ட அலுவலர் ஜெயராஜ் கூறும்போது, "புலி நகம் பதித்த சங்கிலி அணிந்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க சங்கிலியில் பதித்திருப்பது புலி நகமா என்பதை ஆராய வண்டலூரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அந்த ஆய்வறிக்கை கிடைத்தவுடன் தொடர்புடைய நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்" என்றார்.