நீலகிரியில் காலநிலை மாற்றம்: திடீர்மழை


உதகையில் மழை | பிரதிநிதித்துவப் படம்.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பனி பொழிவும் அதிகமாக உள்ளதால் வனங்கள், தேயிலை தோட்டங்கள் கருகி வருகின்றன. கோடையில் பசுமையை காண்பதே அரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. உதகை, குந்தா போன்ற பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. பிற இடங்களில் மழையின் அளவு சற்று குறைந்தே காணப்பட்டது. எனினும், இன்று பகலிலும் கடும் மேக மூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழை பெய்தது.

கடும் மேக மூட்டம் காரணமாக பகல் நேரங்களிலேயே எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சென்றனர். மேலும், உதகை மற்றும் புற நகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. கடும் குளிரால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். பல மாதங்களுக்கு பின் உதகையில் மழை தலைகாட்டிய நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில்,பொங்கல் விடுமுறை முடிவடைந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், தொட்டபெட்டா, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், உதகை படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

x