பாஜகவுக்கு அதிர்ச்சி: திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவர், பொதுசெயலாளர் திடீர் ராஜினாமா!


திருநெல்வேலி: நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கரும், பொதுசெயலர் வேல்ஆறுமுகமும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அக்கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் பாஜகவில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட தலைவராக தயாசங்கரும், பொதுசெயலராக வேல் ஆறுமுகமும், தெற்கு மாவட்ட தலைவராக தமிழ்ச்செல்வனும் பொறுப்பு வகித்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தற்போதைய வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கருக்கு ஆதரவாக பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்திருந்ததாக தெரிகிறது. ஆனால் கட்சி தலைமையோ வேறு சிலரின் பெயர்களை பரிசீலிப்பதாக தெரிகிறது.

இதனால் அதிருப்தியடைந்த தயாசங்கர் கட்சியிலிருந்து விலகுவதாக தனது முகநூல் பக்கத்தில் திடீரென்று அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‘இத்துடன் பாஜகவில் எனது அரசியல் பயணம் முடிவடைகிறது. என்னுடன் இதுவரை பயணித்த சகோதர சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். அதேபோல வடக்கு மாவட்ட பொதுசெயலர் வேல் ஆறுமுகமும், கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அடுத்தடுத்து இரு நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது திருநெல்வேலி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய வேல்ஆறுமுகம், ‘கடந்த 18ஆண்டுகளாக கட்சியில் உழைத்துள்ளேன். கட்சியில் உண்மையாக உழைத்தவர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்கள் என்று மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்யாமல், கட்சியில் வேலை செய்யாதவர்களை முக்கிய பொறுப்புகளுக்கு பரிந்துரை செய்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்களை வேட்பு மனுகூட தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்து ஓரங்கட்டியிருக்கிறார்கள்’ என்றார்

x