2026 தேர்தல் வெற்றி என்பது திராவிட மாடலுக்கான  அங்கீகாரமாக இருக்கும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை


சென்னை: 2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் அமைய இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க கழகச் சட்டத்துறை சளைக்காமல் உழைக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இன்று (18-01-2025) சென்னையில் நடந்த தி.மு.கழகச் சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ‘ தமிழ்நாட்டையும் - தமிழ்மொழியையும் - தமிழினத்தையும் - காக்கும் காவல் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாங்கிப் பிடிக்க - தூணாகத் தூக்கி நிறுத்த - எத்தனையோ சார்பு அணிகள் இருக்கிறது! அதில் தனித்துவமானது நம்முடைய சட்டத்துறை! இது, வழக்கறிஞர்கள் அணி மட்டுமல்ல; கழகத்தைக் காக்கும் காவல் அணி!

சோதனை நெருப்பாறுகள் பல கடந்து - அள்ளிவீசப்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டு - நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களைத் தகர்த்தெறிந்து - 75 ஆண்டுகளாகக் கற்கோட்டையாகக் கழகம் நிமிர்ந்து நிற்கிறது; ஆறாவது முறை ஆட்சியமைத்து இருக்கிறது என்றால், அதற்கு லட்சக்கணக்கான கழக வீரர்களின் தியாகம்தான் காரணம்! அந்தத் தியாகங்களுக்கு துணை நின்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள்தான் சட்டத்துறையைச் சார்ந்த நமது வழக்கறிஞர்கள்!

1975-இல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, நான் உட்பட பலரும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டோம்! வெளியில் இருந்த கழகத் தோழர்கள் பலரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள்! அவர்கள் அனைவரையும் பாதுகாத்தது சட்டத்துறைதான்! எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தலைவர் கருணாநிதி மேல் ஏராளமான வழக்குகளைப் போட்டார்கள்... அப்போது அவருக்காக வாதாட பெரும் படையே வரும்... நம்முடைய ஆர்.எஸ்.பாரதியைக் கேட்டால், அந்த வரலாற்றையெல்லாம் விரிவாகச் சொல்வார்.

கழகம் எதிர்க்கட்சியாக இருக்கும்போதெல்லாம், மக்களுக்கான போராட்டங்களை நடத்தி, ஏராளமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறோம்... கடந்த கால அ.தி.மு.க. ஆட்சிகளில் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்பட்ட ஏராளமான பொய் வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறோம்... அப்போதெல்லாம் துணையாக நின்ற அமைப்புதான், இந்தச் சட்டத்துறை! சட்டத்துறையின் முக்கியமான சட்டப் போராட்டங்களை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இன்றைக்கு நாமெல்லாம் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறோமே ‘அண்ணா அறிவாலயம்’, அந்த இடத்திற்கே நெருக்கடி வந்தது. அதைக் கட்ட அனுமதி இல்லை என்று சொல்லி, தடை போட்டார்கள். அந்தத் தடையை உடைத்தது, இந்தச் சட்டத்துறைதான்!
கருப்பு சிவப்பு கொடிக்கும் - உதயசூரியன் சின்னத்துக்கும் ஒரு காலத்தில் பிரச்சினை வந்தது. அதை மீட்டுத் தந்ததும், இந்தச் சட்டத்துறைதான்!

அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கால முறைகேடுகளைத் தடுக்க நம்முடைய மரியாதைக்குரிய சண்முகசுந்தரம் அவர்கள், தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து, போராடினார். அவரின் அந்தத் தியாகம், விலைமதிப்பில்லாதது!
அடுத்து, இன்றைக்கும் நம்முடைய நெஞ்சங்களில் ஆறாத வடுவாக இருப்பது, தலைவர் கருணாநிதியின் நள்ளிரவுக் கைது! அந்தக் கொடூரமான கைதையும் நீதிமன்றத்தில் கவனப்படுத்தி வாதிட்டதால்தான், அன்றைக்கு இருந்த அராஜக அரசு அடிபணிந்து, தலைவரை விடுதலை செய்தது! கழகத்தின் மீது கற்பிக்கப்பட்ட களங்கத்தில் இருந்து ஆ.இராசா வாதாடி வென்றார். இது அனைத்துக்கும் மேல், தலைவர் கருணாநிதி மறைந்தபிறகு, பேரறிஞர் அண்ணாவின் அருகில் அவர் துயில்கொள்ள நடந்த சட்டப் போராட்டம்... அன்றைக்கு இருந்த நிலைமையை நான் அதிகமாக விளக்க விரும்பவில்லை. நம்முடைய வில்சன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களால்தான், கடற்கரையில் இடத்தைப் போராடிப் பெற்றோம்!


இப்படி தொடர்ந்து, இது சட்டத்துறையா - இல்லை, சாதனைத் துறையா என்று வியப்படையும் வகையில், ஏராளமான சட்டப்பூர்வ சாதனைகளைச் செய்திருக்கிறீர்கள். கட்சிக்காக மட்டுமல்ல, மக்களின் நலனுக்காகவும் ஏராளமான பணிகளைச் செய்திருக்கிறோம். * அ.தி.மு.க. ஆட்சி முடக்க நினைத்த சமச்சீர் கல்வியைக் காப்பாற்றினோம்.
* குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
* நீட் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கை தடுத்தோம்!
* மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதன்முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கினோம்.
* கலைஞர் நூற்றாண்டுப் பூங்கா இருக்கும் இடத்தை தனியாரிடம் இருந்து மீட்கக் காரணமாக இருந்தோம்!
* இது அனைத்துக்கும் மேல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததும் இந்த வழக்கறிஞர் படைதான்!
* மருத்துவம் மற்றும் மருத்துவ உயர் கல்வியில் இன்றைக்கு ஆண்டுதோறும் 5 ஆயிரத்து 500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கிறது என்றால், இந்தச் சமூகநீதி சாதனையை ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே சாத்தியப்படுத்தியது நம்முடைய சட்டத்துறைதான்! இந்தச் சாதனைப் பயணம் தொடர, இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்!
தி.மு.க. சட்டத்துறைக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது... ஒரு கம்பீரம் இருக்கிறது... அறிவு முகம் இருக்கிறது! நம்முடைய சட்டத்துறையில் இருந்துதான், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் போன்றவர்கள் உருவானார்கள்.

சட்டத்துறையைச் சேர்ந்தவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகளாக - உயர்நீதிமன்ற நீதிபதிகளாக - மாநில அமைச்சர்களாக - ஒன்றிய அமைச்சர்களாக - நாடாளுமன்ற உறுப்பினர்களாக - சட்டமன்ற உறுப்பினர்களாக சிறப்பாக பணியாற்றினார்கள்; பணியாற்றி வருகிறார்கள்... நீதிமன்றங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சி விவாதங்களிலும் எதிர்கட்சியினரின் பொய்களைத் தங்களுடைய கூர்மையான வாதங்களால் தோலுரிக்கிறார்கள்! இவ்வாறு, கழகத்துக்கு தோள் கொடுக்கும் இந்தச் சட்டத்துறையில் இருந்து, ஏராளமான ரத்தினவேல் பாண்டியன்கள் உருவாக வேண்டும்! அதாவது, நம்முடைய சட்டத்துறையில் இருந்து – மாவட்ட நீதிபதிகள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – உச்சநீதிமன்ற நீதிபதிகள் உருவாக வேண்டும்!
இங்கு ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள் இருக்கிறீர்கள்... நீங்கள் நம்முடைய இளம் வழக்கறிஞர்களுக்கு அதற்கான வழிகாட்டியாக இருக்க வேண்டும்! பயிற்சிகளை வழங்க வேண்டும்! இளம் வழக்கறிஞர்களுக்குச் சட்டத்தின் பார்வையோடு, சமூகநீதியின் பார்வையும் உருவாக பயிற்றுவிக்க வேண்டும்!

அடுத்ததாக, உங்கள் முன்னால் இருக்கும் இன்னொரு முக்கியக் கடமை – நாம் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையான, நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றபட உரையாடல்களை நீங்கள் தொடங்க வேண்டும்!
அடுத்து, நம்முடைய என்.ஆர்.இளங்கோ ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டின் முக்கியமான நிகழ்ச்சியாக,
* மாநிலங்களவை உறுப்பினர் - ஒன்றிய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் – * முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி - * மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் ஆகியோரைக் கொண்ட, “ஒரு நாடு ஒரு தேர்தல்” என்ற கலந்துரையாடல் ஏற்பாடு செய்து, அவர்களும் தங்களுடைய வாதங்களை அழுத்தமாக வைத்திருக்கிறார்கள்! இன்றைய காலக்கட்டத்தில் மிகத் தேவையான உரையாடல் இது!

இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே உடை - ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது! அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்!. பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது... நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும்! இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும்! இது, பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல! இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி அவர்களைச் சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும்!

பா.ஜ.க.வும் - பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது... இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன். பா.ஜ.க. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம்... ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஒரு திட்டத்தை அறிவித்தபோது, நம்மைப் போன்ற அரசியல் இயக்கங்களைக் கடந்து, வெளியில் இருந்து எதிர்த்தவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மரியாதைக்குரிய எஸ்.ஒய்.குரேஷி அவர்கள். “பல முறை தேர்தல்கள் நடத்துவதால், தேர்தல் செலவு அதிகமாகிறது” என்று பா.ஜ.க. தரப்பு சொன்னபோது, “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால்தான் அதிகமான செலவாகும். தேர்தலுக்கான கருவிகளும், ஆட்களும், பாதுகாப்பும் ஒரே நேரத்தில் தேவைப்படுவதால் செலவு அதிகமாகத்தான் ஆகும்” என்று குரேஷி அவர்கள் சரியாகச் சொன்னார்.

இந்தச் சூழலில், இந்திய அரசியலமைப்பை - கூட்டாட்சிக் கருத்தியலைக் காக்க ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நாம் இறுதி வரை எதிர்த்தாக வேண்டும். ஏன் என்றால், நான் முன்பே சொன்னது போன்று, பா.ஜ.க.வின் செயல்திட்டங்கள் நீண்ட காலத்துக்கானது. தங்களின் செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை மெதுவாகச் சமூகத்தில் விதைப்பார்கள்... அதற்கு துணையாகப் பல எடுபுடிகளை பேச வைப்பார்கள்... தங்களின் கையில் இருக்கும் ஊடகங்களை வைத்தே பொய்ச் செய்திகளை பரப்புவார்கள்... விவாதங்களைக் கட்டமைப்பார்கள்... அளவில்லாமல் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள்... பச்சையான பொய்களால் கொச்சைப்படுத்துவார்கள்... பா.ஜ.க.வின் வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி தீயாக வேலை செய்யும்… இதையெல்லாம் கடந்துதான் நாம் போராட வேண்டும்! வெற்றி பெற வேண்டும்!

இப்போது கூட, இந்திய நாட்டையும் - அரசியலமைப்புச் சட்டத்தையும் - மக்களாட்சியையும் காக்கத்தான் நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம்... ஆனால், நம்மை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள். எந்த ஆளுநர்? மரபுப்படி, நிறைவாக பாடப்படும் நாட்டுப்பண் பாடலுக்குக்கூட நிற்காமல் வெளியேறிய ஆளுநர்! இருந்தாலும் - ஒன்றிய அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை என்பது, நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்று அவரை மாற்றிவிடாதீர்கள்... அவர் பேச பேசத்தான் பா.ஜ.க. அம்பலப்படுகிறது... திராவிடக் கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சென்று சேருகிறது... மக்களுக்கும் மாநில சுயாட்சி முழக்கத்தின் நியாயங்கள் புரிகிறது! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இன்று முழுவதும் இந்த மாநாட்டில், நம்முடைய தோழர்கள் திராவிடவியல் குறித்து அழுத்தமாக உணர்வோடு பேசுவதற்கான தூண்டுகோலாக இருப்பவரும் நம்முடைய ஆளுநர்தான்!

தந்தை பெரியார் அடிக்கடி ஒன்றைச் சொல்வார், “என்னை செயல்பட வைப்பது, என்னுடைய தோழர்கள் அல்ல; என்னுடைய எதிரிகள்” என்று சொல்வார். அப்படிப்பட்ட கொள்கை எதிரிகளை - பண்பாட்டு எதிரிகளைத்தான் நாம் இன்றைக்குப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்!
இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை! ஏன் என்றால், கருத்தியல்ரீதியாக பேசினால் அவர்களால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது! அதனால்தான், அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கிறார்கள்... அந்த துரோகக் கூட்டத்தைத் துடைத்தெறிய வேண்டிய கடமை - சட்டப் போராளிகளான உங்களுக்கு இருக்கிறது! இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் கடமை நமக்கு இருக்கிறது! இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தந்து பாதுகாக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது!. எனவே, இங்கிருக்கும் சட்டப் போராளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வது, நீங்கள் கொள்கைப் போராட்டத்திலும் உதவ வேண்டும்; தேர்தல் களத்திலும் உதவ வேண்டும்! தேர்தல் நேரத்தில் உங்களுடைய ‘வார் ரூம்’ பணிகள் மகத்தானது! பாராட்டுக்குரியது! இந்த நேரத்திலும் அதை நினைத்து நான் மகிழ்கிறேன்.

2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம்! இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்! . 2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் அமைய - இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க - கழகச் சட்டத்துறை சளைக்காமல் - சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும்!. கழகத்தின் காவல் அரணாக விளங்கும் சட்டத்துறை சார்பில், கழக வழக்கறிஞர்கள் நலனுக்காக இன்றைக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கிறீர்கள்... அதை ஆக்கப்பூர்வமான திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ள என்.ஆர்.இளங்கோ அவர்களை ஒரு செயல் திட்டம் வகுக்கச் சொல்லி இருக்கிறேன். அதனடிப்படையில், அதற்கான அறிவிப்புகள் வரும் என்பதைச் சொல்லி, கழக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளையும் நன்றியையும் சொல்லி விடைபெறுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

x