காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலைய திட்டத்துக்காக காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5133 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பொதுமக்களின் விளை நிலங்கள், நீர் நிலைகள் என பல இடங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் 908 நாட்களாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்திக்க முடிவு செய்தார். இதற்காக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சி சார்பில் மனு அளித்தனர். கடந்த சில தினங்களாகவே அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் விஜய் வருகைக்கான ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்நிலையில் விஜய் பரந்தூர் பகுதிக்கு வருவதற்கு வரும் 20-ம் தேதி அனுமதி காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் முழுமையாக கையகப்படுத்தப்படும் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் விஜய் சந்திக்கிறார். இதில் 13 கிராமங்களில் இருந்து பாதிக்கப்படும் பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்கின்றனர். இதற்காக இடம் மட்டும் இன்று உறுதிப்படுத்தப்பட உள்ளது.