பாஜகவோடு கூட்டணி கிடையாது; குருமூர்த்தி வாங்கி கட்டிக்கொள்ள வேண்டாம் - ஜெயக்குமார் காட்டம்!


சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என அதிமுக கட்சி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. குருமூர்த்தி ஏற்கனவே எங்களிடம் நிறைய வாங்கி கட்டிக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாங்கி கட்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை. திமுக ஏராளமான பணத்தை செலவு செய்து இடைத்தேர்தலை சந்திக்கும். அதிமுகவை பொறுத்தவரை தேர்தலுக்கு அஞ்சுகிற இயக்கம் அல்ல. 2026ம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் பாச்சா பலிக்காது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக மக்களின் நெஞ்சம் கொதித்து போய் உள்ளது. பொங்கல் பரிசுத் தொகை வழங்காமல் மக்களை திமுக அரசு வஞ்சித்துள்ளது.

ரூ.500 கோடி செலவில் கருணாநிதி பன்னாட்டு மையம் அமைக்க அரசுக்கு பணம் இருக்கிறது. ஆனால் இந்த அரசால் பொங்கல் பரிசு தொகை கொடுக்க முடியவில்லை. பாஜக- அதிமுக கூட்டணி உருவாக வேண்டும் என்பது போல பேசுவதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். குருமூர்த்தி வாயை மூடி கொண்டு இருக்க வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என கட்சி எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை. குருமூர்த்தி ஏற்கனவே எங்களிடம் நிறைய வாங்கி கட்டிக்கொண்டார். மீண்டும் மீண்டும் வாங்கி கட்டிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாக வேண்டாம். அதனால் வாயை அடக்கிக் கொண்டு, குருமூர்த்தி அவரின் வேலையை மட்டும் செய்தால் போதும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் துணை முதல்வர் உதயநிதி தம் அருகே மகன் இன்பநிதியை உட்கார வைத்துக் கொண்டார். அதனால் மாவட்ட ஆட்சியரே உட்கார இடம் இன்றி நிற்க வேண்டியதாக இருந்தது. இன்ப நிதிக்கு அமைச்சர்கள் ஏன் சால்வை அணிவிக்க வேண்டும். திமுக அமைச்சர்கள் மரபு மற்றும் மாண்பை மீறி செயல்படுகிறார்கள். உண்மையிலேயே சொல்கிறேன், கேமரா மட்டும் இல்லையென்றால் இன்பநிதி காலிலேயே விழுந்து இருப்பார் அமைச்சர் மூர்த்தி" என்று ஜெயக்குமார் கூறினார்.

x