ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து. திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 65 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலை, அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி, தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், கூட்டணிக் கட்சியினருடன் வந்து தேர்தல் அலுவலர் மணீஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் எம்பி அந்தியூர் செல்வராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாபெரும் வெற்றியடையும் என்றார்.