ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை எதிர்நோக்கும் போக்குவரத்து ஊழியர்கள்!


சென்னை: ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடைபெறும் என போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 1.11 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. அந்த வகையில் 13-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2019ம் ஆண்டு ஆக.31ம் தேதியுடன் காலாவதியானது. அதைத் தொடர்ந்து பல்வேறு காரணங்களால் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாகிய நிலையில், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் 14-வது ஊதிய ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியான பின்னர் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விரைந்து நடத்த வேண்டும் என தொடர்ச்சியாக தொழிற்சங்கங்கள் கோரிக்கை எழுப்பின. ஆனால் ஓராண்டு தாமதமாக 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் கடந்த ஆக.27-ம் தேதி நடைபெற்றது. 80-க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் கடந்த காலங்களை விட சங்கங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் மாநில பிரதிநிதித்துவம் பெற்ற சங்கங்களுக்கு பேச கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த அரசு திட்டமிட்டு, கடந்த டிச.27, 28-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவித்தது. முதல் நாளில் தொமுச, அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட சங்கங்களும், அடுத்த நாளில் இதர சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்குமாறு பேச்சுவார்த்தைக் குழு சார்பில் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டன.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த காரணத்தால் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து சட்டப்பேரவையிலும் பேச்சுவார்த்தை தொடர்பான கேள்விக்கு நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவித்து, விரைந்து ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதேநேரம், இரண்டு நாட்களாக அல்லாமல் ஒரே நாளில் அனைத்து சங்கங்களும் இடம்பெறும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

x