அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி அபிசித்தர் அபாரம்; சேலம் மோகனின் காளை முதலிடம்!


மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கிய அபிசித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. சேலம் மோகனின் பாகுபலி காளைக்கு சிறந்த காளைகளில் முதல் பரிசு வழங்கப்பட்டது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தி அபிசித்தர் முதலிடம் பிடித்தார். இவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார், மற்றும் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

13 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்த பொதும்பு ஸ்ரீதருக்கு ஆட்டோவும், 10 காளைகளை பிடித்து 3ம் இடம்பிடித்த மடப்புரம் விக்னேஷ் பைக்கும், 9 காளை பிடித்த 4ம் இடம்பிடித்த ஏனாதி அஜய்க்கு டிவிஎஸ் எக்ஸ்சல்-ம் வழங்கப்பட்டது.

அதேபோல சேலம் மோகனின் பாகுபலி காளைக்கு சிறந்த காளைகளில் முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. எரக்கநாயக்கனூர் பார்த்தசாரதி காளைக்கு 2வது பரிசாக பைக், புதுக்கோட்டை தாயினிப்பட்டி கண்ணன் காளைக்கு 3-வது பரிசாக எலக்ட்ரிக் பைக், இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் காளைக்கு 4வது பரிசாக லோடு பைக்கும் வழங்கப்பட்டது. இவர்களுக்கான பரிசுகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.

இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 8 சுற்றுக்களாக 989 காளைகள் அவிழ்க்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என 72 பேர் காயமடைந்தனர்.

x