நாமக்கல்: நாமக்கல் முன்னாள் எம்பி பி.ஆர். சுந்தரம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
ராசிபுரத்தை சேர்ந்தவர் பி.ஆர்.சுந்தரம். அதிமுகவைச் சேர்ந்த சுந்தரம் கடந்த 1996 முதல் 2001 வரையும், 2001 முதல் 2006 வரையும் இரு முறை ராசிபுரம் எம்எல்ஏவாக இருந்தார்.
மேலும் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2019 வரை நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த பி.ஆர்.சுந்தரம் கடந்த 2021ம் ஆண்டு பின் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
தொடர்ந்து திமுகவில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பி.ஆர்.சுந்தரம் இன்று அதிகாலை ராசிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் செய்தியில், ‘ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பி.ஆர். சுந்தரம் மறைந்ததை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றி வந்தவர் ஆவார். 2021-ம் ஆண்டு முதல் திமுகவில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், அரசியல் இயக்க நண்பர்கள், நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.