மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு இன்று (ஜன.15) மாலை 6 மணி முதல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேட்டூர் அணையின் கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. கிழக்கு கால்வாய் மூலம் 27 ஆயிரம் ஏக்கரும், மேற்கு கால்வாய் மூலம் 18 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. கிழக்கு கால்வாய் 40.20 மைல் தூரமும், மேற்கு கால்வாய் மூலம் 27 மைல் தூரத்துக்கு சென்று காவிரியில் கலக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரையிலான 137 நாட்களுக்கு 9.06 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும்.
கர்நாடக, கேரளா பகுதியில் பெய்த மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, கடந்த ஜூலை 30-ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. பின்னர், பாசனத்துக்கு தேவைக்கு ஏற்ப அதிகபட்சமாக விநாடிக்கு 1,000 கன அடி வரை திறக்கப்பட்டது. பின்னர், 3 மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையின் காரணமாக, பாசனத்துக்கு நீர் திறப்பு 300 கன அடியாக திறக்கப்பட்டு வந்தது. நடப்பாண்டில் மேட்டூர் அணை வேகமாக நிரம்பியதால் முன்கூட்டியே ஜூலை 30-ம் தேதி முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை 137 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு கடந்த மாதம் டிசம்பர் 13-ம் தேதி நிறுத்தப்பட இருந்தது. இந்நிலையில் கால்வாய் பாசனத்துக்கு கால நீடிப்பு செய்து நீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறந்து விடும் காலத்தினை கடந்த மாதம் டிசம்பர் 14-ம் தேதி முதல் வரும் இன்று (ஜனவரி மாதம் 15-ம் தேதி) வரை பாசனத்திற்கு 33 நாட்களுக்கு கால நீட்டிப்பு செய்து நீர் திறந்து விடப்பட்டது. ஒட்டுமொத்தமாக 170 நாட்களுக்கு நீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று மாலை 6 மணி முதல் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்மட்டம் 114.14 அடி: மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து மாற்றமின்றி விநாடிக்கு 381 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 5,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.14 அடியாகவும், நீர் இருப்பு 84.43 டிஎம்சியாகவும் உள்ளது.