பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் பார்த்திபனுக்கு முதல் பரிசு: சிறந்த காளைகளுக்கும் பரிசு!


மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அதேபோல சத்திரப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியின் காளை முதல் பரிசு பெற்றது.

இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தைச் சேர்ந்த பார்த்திபன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு துணை முதல்வர் வழங்கும் கார் பரிசளிக்கப்பட்டது. அடுத்து 12 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டியைச் சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துள்ள துளசிராம் 2-ம் இடம் பிடித்தார். இவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.
பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3-ம் இடம் பிடித்தார், இவருக்கு எலக்ட்ரிகல் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

அதேபோஅல் சத்திரப்பட்டியைச் சேர்ந்த தங்கப்பாண்டியின் காளை முதல் பரிசு பெற்றது. இவருக்கு தமிழக முதல்வர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. சின்னப்பட்டியை கார்த்திக்கின் காளை 2வது இடம் பெற்றது. இவருக்கு அலங்கை பொன் குமார் என்பவர் வழங்கிய நாட்டின பசுவும், கன்றும் பரிசளிக்கப்பட்டது.
குருவித்துறையைச் சேர்ந்த பவித்ரனின் காளை 3-ம் இடம் பெற்றது. இவருக்கு விவசாய வேளாண் கருவி (ரெட்டேட்டர்) பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை வளர்ப்போருக்கு அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராசன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியில் இன்று ஜல்லிக்கட்டு விழா காலை 7.35 மணிக்கு தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

x