சென்னை: தமிழக மீனவர்கள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்தும், 6 பேரை விடுதலை செய்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் அருகே மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற கார்த்திக் ராஜா, சகாய ஆண்ட்ரிஸ் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு விசைப்படகுகளை நெடுந்தீவு அருக இலங்கை கடற்படையினரால் டிசம்பர் 8ம் தேதி சிறைபிடிக்கப்பட்டது.
படகுகளிலிருந்த கண்ணன், காளி, முத்துராஜ், பத்ரப்பன், யாசின், சேசு, ராமகிருஷ்ணன், வேலு ஆகிய 8 மீனவர்ள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் புதன் கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் 6 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 2 பேருக்கு தலா ஒன்பது மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.