திருநெல்வேலி, தென்காசி: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை இன்று தடைவிதித்திருந்தது. அதே நேரத்தில் தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் சீராக நீர்வரத்து இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்துவரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று இரவில் பலத்த மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 68 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. நாலுமுக்கில் 56 மி.மீ., காக்காச்சியில் 46 மி.மீ., மாஞ்சோலையில் 37 மி.மீ. மழை பெய்திருந்தது.
அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீ): பாபநாசம்- 3, சேரன்மகாதேவி- 2.20, மணிமுத்தாறு- 2, திருநெல்வேலி-1.80, பாளையங்கோட்டை- 1.60, அம்பாசமுத்திரம்- 1.40, கன்னடியன் அணைக்கட்டு-1.20, சேர்வலாறு அணை- 1.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 583 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 227 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் 111.40 அடியாக இருந்தது. அணையிலிருந்து 800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100.63 அடியாக இருந்தது. அணையிலிருந்து 430 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு அணையிலிருந்து 80 கனஅடி தண்ணீர் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழையால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறை இன்று தடைவிதித்திருந்தது. மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் அறிவித்திருந்தது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்துள்ளது. இன்று காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில் பல்வேறு இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): ராமாநதி அணை- 5, சிவகிரி, கடனா அணை- தலா 4, கருப்பாநதி அணை- 3.50, சங்கரன்கோவில்- 2, செங்கோட்டை - 1.
குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்ததை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொங்கல் விடுமுறை என்பதால் அருவிகளில் குளிக்க வழக்கத்தைவிட கூட்டம் அதிகமிருந்தது.