புதுச்சேரி: காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற உறியடி, இசை நாற்காலி போன்ற போட்டிகளில் போலீஸார் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
புதுச்சேரி முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காட்டேரிக்குப்பம் கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காவல் நிலைய வளாகத்தில் புது பானை வைத்து அரிசியிட்டு பொங்கல் வைத்து போலீஸார் கொண்டாடினர். அங்கேயே நடந்த உறியடி, இசை நாற்காலி போன்ற போட்டிகளில் போலீஸார் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய ஆய்வாளர் ராஜ்குமார், ''காவல் நிலையத்தில் பணியாற்றும் கீழ்நிலை ஊழியர் முதல் அதிகாரி வரை ஒரு குடும்பமாக உள்ளோம். அதனை வெளிபடுத்தும் விதமாக காவல் நிலையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினோம்'' என தெரிவித்தார்.