சென்னை சங்கமம் - நம்ம ஊரு திரு​விழா தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி​வைத்​தார்


சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் கீழ்ப்பாக்கத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மு.பெ. சாமிநாதன், திமுக எம்பி கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

சென்னை: பொங்கலை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

பொங்கலை முன்னிட்டு அரசுத் துறைகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கலை பண்பாட்டுத் துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளையொட்டி, தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளுடன் ‘சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா’ கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா’வின் கலைநிகழ்ச்சிகள் தொடக்க விழா கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி ஆலயத் திடல் விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

அப்போது தமிழகத்தின் புகழ்பெற்ற 250 கலைஞர்கள் இணைந்து மாபெரும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தினர். சென்னையில் 18 இடங்களில் இன்றுமுதல் (ஜன.14) 17-ம் தேதி வரை மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரை சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைச்சிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், மல்லர் கம்பம், வில்லுப்பாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

அத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும், கேரளத்தின் தெய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்தராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய பிற மாநிலக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. விழா நடைபெறும் இடங்களில் உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது.

சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 8 நகரங்களிலும் இந்த ஆண்டு சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறும் 18 இடங்கள்: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ஆர்.ஏ.புரம் சென்னை இசைக் கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண, சாரணியர் திடல், கிண்டி கத்திப்பாரா வளாகம், ஜாபர்கான்பேட்டை ராகவன் காலனி மாநகராட்சி விளையாட்டுத் திடல், தி.நகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய்நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் - நம்மஊரு திருவிழா மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

x