புதுச்சேரியில் இருந்து கண்ணூர், திருப்பதிக்கு விமான சேவை - மத்திய அரசுக்கு கடிதம்


புதுச்சேரி: புதுச்சேரியிலிருந்து கண்ணூர், திருப்பதி இடையே விமான சேவை தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு, இந்திய விமான போக்குவரத்து ஆணையத்துக்கு கடிதம் எழுத சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியிலிருந்து கேரள மாநிலம் கண்ணூர், ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி இடையேயான விமான சேவை தொடங்க சாத்திய கூறுகள் தொடர்பான கூட்டம் புதுச்சேரி அரசு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் இன்று சட்டப்பேரவையிலுள்ள அவரது அறையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மாஹே எம்எல்ஏ ரமேஷ் பரம்பத், கண்ணூர் விமான நிலைய மேலாண் இயக்குநர் தினேஷ்குமார், முதுநிலை மேலாளர் அஜய்குமார், புதுச்சேி முதுநிலை மேலாளர் ராஜேஷ் சோப்ரா, சுற்றுலாத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், புதுச்சேரி - கண்ணூர் இடையேயான விமான சேவை தொடக்கம் தொடர்பான சந்தை சாத்திய கூறுகள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் லட்சுமி நாராயணன், “புதுச்சேரி - கண்ணூர் மற்றும் புதுச்சேரி - திருப்பதி இடையேயான விமான சேவையை மேற்கொள்ளத் தேவையான சாத்திய கூறுகளை இந்திய விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் இண்டிகோ நிறுவன ஒருங்கிணைப்புடன் ஆராய வேண்டும்” என்றார். அதையடுத்து இண்டிகோ நிறுவன முதுநிலை துணை தலைவர் ராஜத் குமாருடன் கலந்தாலோசித்தார்.

அதைத்தொடர்ந்து இறுதியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் கூறுகையில், “புதுச்சேரியிலிருந்து கண்ணூர், திருப்பதி இடையே விமான சேவை தொடக்கம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துடனான சாத்திய கூறுகளை தரவுகளுடன் மத்திய அரசு, இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திற்கு, கடிதம் எழுத சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.

x