இங்கிலாந்து கடற்படையால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது - மத்திய அரசுக்கு ஜிகே.வாசன் கோரிக்கை


சென்னை: மத்திய அரசு உடனடியாக இங்கிலாந்து அரசுடன் பேசி தற்போது இங்கிலாந்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 10 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய அரசு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் டிக்கோகார்சியா தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10 பேரை இங்கிலாந்து கடற்படையினர் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இச்சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்வதால் மீன்பிடித் தொழிலை இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் தமிழக மீனவர்கள். இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் போது இங்கிலாந்து கடற்படையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதும் முறையல்ல.

எனவே மத்திய அரசு உடனடியாக இங்கிலாந்து அரசுடன் பேசி இங்கிலாந்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். இனிமேலும் இது போன்ற கைது நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதை மத்திய அரசு இங்கிலாந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசு தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவும், பிற நாட்டின் கடற்படையினரால் தமிழக மீனவர் பாதிக்கப்படமால் இருக்கவும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

x